குடிநுழைவுக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை: ஆஸ்திரேலியப் பிரதமர்

குடிநுழைவுக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை: ஆஸ்திரேலியப் பிரதமர்

1 mins read
7b6acb35-d1b1-40be-8967-9ed75909196e
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி, குடிநுழைவுக் கொள்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற யோசனையை நிராகரித்திருக்கிறார்.

வலசாரி ஒரே தேசக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ள நிலையிலும் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கடும் சோதனை நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன,” என்றார் தொழிற்கட்சித் தலைவரான திரு அல்பனீசி. குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து குறைவானவர்களை எடுத்துக்கொள்ளும் வகையில் குடிநுழைவுக் கொள்கை கடுமையாக்கப்படுமா என்று ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) அளித்த நேர்காணலின்போது அவரிடம் கேட்கப்பட்டது.

“நாட்டில் குடிநுழைவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை சோதனைமுறைகள் நடப்பில் உள்ளன. விசாக்கள் கொடுக்கப்படுவதற்கு முன்பும் சோதனைகளை மேற்கொள்கிறோம்,” என்றார் ஆஸ்திரேலியப் பிரதமர்.

ஒரே தேசக் கட்சிக்கான ஆதரவு இவ்வாண்டில் (2026) 27 விழுக்காட்டுக்குக் கூடியுள்ளது. முக்கிய எதிர்த்தரப்புக்குக் கிடைத்த 18 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம். ஆஸ்திரேலியச் செய்தி ஊடகமொன்று நடத்திய கருத்துக்கணிப்பில் அந்த விவரங்கள் தெரியவந்தன.

குடிநுழைவுக் கொள்கைக்கு எதிரான ஆதரவு வலுப்பதை அந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஒரே தேசக் கட்சியினரும் அதன் தலைவர் செனட்டர் பாலின் ஹான்சனும் பல்லாண்டாக அதற்காகப் போராடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் 2028ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் அடுத்த தேர்தலை நடத்தியாக வேண்டும்.

குறிப்புச் சொற்கள்