டிரம்ப் ஹோட்டல், குடியிருப்புத் திட்டத்தைக் கைவிட்ட ஆஸ்திரேலியா

டிரம்ப் ஹோட்டல், குடியிருப்புத் திட்டத்தைக் கைவிட்ட ஆஸ்திரேலியா

1 mins read
d0bd16cd-459a-406e-8251-b5f07f996a27
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்டில் 91 தளங்களுடன் கூடிய ‘டிரம்ப் டவர்’ திட்டம் குறித்து டிரம்ப் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் பகுதியில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.4 பில்லியன்) மதிப்பில் 91 தளங்களுடன் கட்டப்படவிருந்த டிரம்ப் ஹோட்டல், அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம் கைவிடப்பட்டது.

‘டிரம்ப்’ எனும் வணிக முத்திரை ஆஸ்திரேலியர்களிடையே ‘நச்சாக’ மாறிவிட்டதால் அத்திட்டம் கைவிடப்படுவதாக அதன் மேம்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

‘டிரம்ப்’ முத்திரை ஆஸ்திரேலியர்களிடம் தனது நற்பெயரை இழந்துவிட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் ஆல்டஸ் பிராபர்ட்டி குழுமத்தின் தலைமை நிர்வாகி டேவிட் யங் குறிப்பிட்டார்.

எனினும், வேறு வணிக முத்திரையின் பெயரில் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குடும்பத்தினர்மீது தமக்கு எந்தக் கசப்புணர்வும் இல்லை என்றும் இந்த முடிவு முழுக்க முழுக்க வணிகம் சார்ந்தது என்றும் திரு யங் தெளிவுபடுத்தினார்.

அந்த பிரம்மாண்டமான ‘டிரம்ப் டவர்’ திட்டம் குறித்து டிரம்ப் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. அது ‘கடற்கரைப் பகுதியில் சொகுசு வாழ்க்கைக்குப் புதிய இலக்கணமாகத் திகழும்’ என்றும் அது குறிப்பிட்டிருந்தது. அதிபர் டிரம்ப்பின் மகன்கள் அந்நிறுவனத்தை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ‘டிரம்ப் டவர்’ திட்டத்திற்கு எதிரான இணையவழி மனுவில் ஏறத்தாழ 124,000 பேர் கையெழுத்திட்டனர். ஜனநாயக நெறிமுறைகளை அதிபர் டிரம்ப் அவமதிப்பதாக அந்த மனுவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்