ஜோகூர் பாரு: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு மதுப்புட்டிகளைக் கடத்தும் முயற்சியை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு (ஏகேபிஎஸ்) முறியடித்துள்ளது.
அந்த மதுபானங்களின் மொத்த மதிப்பு 110,652.76 ரிங்கிட் (S$35,615) என்றும் செலுத்தப்படாத வரிகள் அதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 9) பிற்பகல் 3 மணியளவில் மலேசியாவுக்குள் நுழைந்த வேன் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது.
சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் உள்ள ஏகேபிஎஸ் அமைப்பின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது அந்த வேனுக்குள் மதுப்புட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கறுப்புநிறத் துணிக்குள் 888 மதுப்புட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் அவற்றில் இருந்த மதுபானத்தின் அளவு 700 லிட்டர் என்றும் ஏகேபிஎஸ் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
ஓட்டுநர் மட்டுமே இருக்கும் வாகனங்களுக்கான தடத்தில் சென்ற அந்த வேனில் ஓட்டுநரின் அருகே பயணி ஒருவரும் காணப்பட்டார்.
உள்ளூர்வாசிகளான அவர்களில் ஒருவரின் வயது 38, மற்றவரின் வயது 43. விசாரணையின்போது அவ்விருவரும் ஒத்துழைக்க மறுத்து, கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அமைதி காத்ததாக அதிகாரிகள் கூறினர்.
“கறுப்புத்துணியால் சுற்றப்பட்ட பல்வேறு பெட்டிகள் அந்த வேனில் இருந்தன. அந்த 700 லிட்டர் மதுவும் கடத்தும் நோக்கத்துடன் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன,” என்று ஏகேபிஎஸ் அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காக மலேசிய சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மலேசியாவுக்குள் நுழையும்போது சரக்குகளின் மதிப்பை அறிவிக்கத் தவறுவதும் கடத்தலுக்கு முயல்வதும் சுங்கத்துறைச் சட்டம் 1967ன்கீழ் குற்றம் என அந்த அமைப்பு நினைவூட்டியுள்ளது.
சட்டத்தை மீறுபவர்களுக்கு, சம்பந்தப்பட்ட பொருள்களின் மதிப்பைப் பொறுத்து அபராதம், சிறை அல்லது அவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

