செபு: மியன்மார் தேர்தலில் ராணுவ ஆதரவுக் கட்சி வெற்றி பெற்றதாக வந்த அறிவிப்பை ஆசியான் அங்கீகரிக்கவில்லை என்று பிலிப்பீன்ஸ் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மியன்மாரில் நடைபெற்ற பொதுத் தேர்தலை ஆசியான் அங்கீகரிக்காது என்று அக்கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்தல் வெற்றியையும் நிராகரிப்பதாக ஆசியான் கூறியிருப்பது மியன்மார் ராணுவ ஆட்சியாளர்களின் முயற்சிகளுக்கு ஏற்பட்ட கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
உள்நாட்டுப் போர், கலவரங்களுக்கு மத்தியில் மியன்மாரில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
மியன்மார் உட்பட 11 உறுப்பினர்களைக் கொண்ட அந்த வட்டாரக் கூட்டமைப்பு, 2021ல் ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்திடமிருந்து ராணுவம் வலுக்கட்டாயமாக அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, ராணுவத்தால் ஆளப்படும் மியன்மார் அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே ஆசியான், இந்த பொதுத் தேர்தலை அங்கீகரிக்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிலிப்பீன்ஸ் வெளியுறவுச் செயலாளர் தெரசா லசரோ, “இப்போதைக்கு அப்படித்தான்,’’ என்று கூறினார். மேலும் ‘‘நடந்து முடிந்த மூன்று கட்டத் தேர்தல்களுக்கும் ஆசியான் ஒப்புதல் அளிக்கவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இந்த நிலைப்பாடு எவ்வாறு மாறக்கூடும் என்பது குறித்து அவர் விரிவாகக் கூறவில்லை.
தாங்கள் ஏற்கெனவே பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுள்ளதாக மியன்மார் ராணுவத்திற்குத் தொடர்புடைய ‘யுஎஸ்டிபி’ கட்சி கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே, மியன்மார் தேர்தலை அணுக்கமாகக் கண்காணித்துவரும் அரசியல் ஆர்வலர்கள், ‘‘தேர்தல்கள் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடக்கவில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ராணுவ ஆட்சியை நியாயப்படுத்தும் முயற்சியில் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர்,’’ என்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

