பிரான்ஸ் அரும்பொருளகத்தில் கலைநயமிக்க வாழைப்பழம் திருட்டு

பிரான்ஸ் அரும்பொருளகத்தில் கலைநயமிக்க வாழைப்பழம் திருட்டு

1 mins read
23cbe30a-3e04-4740-b94d-2585933ebd3c
இத்தாலியக் கலைஞரான மவுரிசியோ கேட்டலான் என்பவரின் ‘காமெடியன்’ எனப் பெயரிடப்பட்ட கலைப்படைப்பின் முக்கிய அம்சமான வாழைப்பழம். - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஸ்ட்ராஸ்பர்க் (பிரான்ஸ்): கிழக்கு பிரான்சில் உள்ள அரும்பொருளகத்திலிருந்து பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கலைப்படைப்பின் முக்கிய அங்கமான வாழைப்பழம் திருடப்பட்டுள்ளதாகக் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியக் கலைஞரான மவுரிசியோ கேட்டலான் என்பவரின் ‘காமெடியன்’ எனப் பெயரிடப்பட்ட கலைப்படைப்பு அது.

சுவரில் ‘டேப்’பால் ஒட்டப்பட்டிருந்த அந்தப் பழம் காணாமற்போனதைக் கடந்த சனிக்கிழமை (மே 30) அரும்பொருளகக் காவலாளி கண்டு, அதுபற்றி நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

பாரிசில் உள்ள புகழ்பெற்ற பொம்பிடு மையத்தின் ஒரு கிளையான அந்த பொம்பிடு-மெட்ஸ் அரும்பொருளகம் திருட்டுச் சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறியது.

மேலும், அந்த வாழைப்பழத்தைத் தற்போது மாற்றி வைத்திருப்பதாகவும் அது தெரிவித்தது.

இது இரண்டாவது முறையாக நடக்கிறது என்றும் கலைப்படைப்புக்கான மரியாதை தொடர்பான ஒரு பிரச்சினையாக இதனைத் தாங்கள் கருதுவதாகவும் அது தெரிவித்தது.

உண்ணக்கூடிய இந்தக் கலைப்படைப்பு, 2019ஆம் ஆண்டு மயாமி கடற்கரையில் நடைபெற்ற ‘ஆர்ட் பேசல்’ கண்காட்சியில் US$1,20,000 என்னும் விலையுடன் அறிமுகமானதிலிருந்தே சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

அந்தக் கண்காட்சியின்போது, ​​டேவிட் டடுனா எனும் கலைஞர் தமக்குப் பசியாக இருப்பதாகக் கூறி அந்தக் ‘காமெடியன்’ கலைப்படைப்பைச் சாப்பிட்டுவிட்டார். இருப்பினும், அதன் மதிப்பு உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்