மலேசிய அமலாக்கத் துறையின் உயரதிகாரிகளுக்கு அன்வார் கெடு

மலேசிய அமலாக்கத் துறையின் உயரதிகாரிகளுக்கு அன்வார் கெடு

2 mins read
38c934f7-3d80-4b6a-8ff8-f4a66ec65676
நிதி அமைச்சின் அலுவலகத்தில் அமலாக்கத் துறைகளின் தலைமை அதிகாரிகள் முன்னிலையில் பேசிய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: மலாய்மெயில்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறையின் உயரதிகாரிகளுக்குக் கெடு விதித்துள்ளார்.

ஒருவாரத்தில் குற்றங்களுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் பணியிலிருந்து விலகிவிடுங்கள் என்று அதிகாரிகளுக்குத் திரு அன்வார் அழுத்தம் கொடுத்துள்ளார்.

“மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இதைப் பார்த்துவிட்டேன், இனியும் பொறுமை இல்லை. கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாக உள்ளார்கள். சிலமுறை அதிகாரிகளுக்குத் தெரிந்தே குற்றங்கள் நடக்கின்றன,” என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் அலுவலகத்தில் அமலாக்கத் துறைகளின் தலைமை அதிகாரிகள் முன்னிலையில் பேசிய திரு அன்வார், ஒரு வாரத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

“கொடுக்கப்பட்ட பொறுப்புகளைச் செய்வதில் ஏதேனும் சிரமங்கள், இடையூறுகள் இருந்தால் அவை குறித்து எனக்கு நேரடியாகத் தெரியப்படுத்துங்கள் அல்லது அமைச்சரையோ, தலைமைச் சட்ட அதிகாரியையோ அணுகுங்கள்,” என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.

“குற்றங்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கத் தெரியவில்லை என்றால் உங்கள் இடத்தை மற்றொருவருக்குக் கொடுங்கள்,” என்றார் அவர்.

இந்த எச்சரிக்கை முக்கியமானது, அமலாக்கத் துறையில் உள்ள பலவீனங்களையும் ஓட்டைகளையும் அடைக்க இது உதவும் என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

“குற்றங்களுக்கு எதிராக மலேசியாவின் நிலைப்பாடு என்ன என்பதை எடுத்துக்காட்ட அரசாங்கம் அமலாக்கத் துறையை வலுப்படுத்துகிறது. நீதித்துறை மீது உள்ள பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பற்றுவதும் முக்கியமானது,” என்று பிரதமர் அன்வார் சொன்னார்.

“நாம் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். மலேசியாவிற்கு நல்ல மரியாதை உள்ளது,” என்றார் அவர்.

உயர் பதவியில் உள்ளவர்கள் தங்களது பணியிலிருந்து வேறு பணிக்கு மாற விரும்புபவர்களின் எண்ணத்தைத் தாம் மதிப்பதாகத் திரு அன்வார் குறிப்பிட்டார்.

அதேபோல், தங்களது பதவியில் நீடிக்கும் உயரதிகாரிகள் சரியாக வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅன்வார் இப்ராகிம்ஊழல்