கோலாலம்பூர்: மலேசியாவில் பள்ளி செல்லும் பதின்ம வயதினர் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கவலை தெரிவித்துள்ளார்.
காவல்துறை வெளியிடும் தகவல்களை மக்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், இளையர்கள் பயங்கரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவதற்கு அவர்களின் வளர்ப்பு முறையும் தவறான வழிகாட்டுதல்களும் காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
“பள்ளி மாணவர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதற்குத் தயாராகி வந்தது அண்மையில் கண்டறியப்பட்டதாகக் காவல்துறை தலைமை இயக்குநர் முகம்மது காலித் இஸ்மாயில் தெரிவித்தார். தவறான வளர்ப்பு முறை அல்லது அதுகுறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் நமது பிள்ளைகள் தவறான பாதைக்குச் செல்ல காரணமாக இருக்கலாம்,” எனத் திரு அன்வார் கூறினார்.
உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஊழியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை (மார்ச் 9) நடந்தது. அந்நிகழ்வில் மலேசியப் பிரதமர் மேற்கூறியவாறு தெரிவித்தார்.
மேலும், இளையர்கள் பயங்கரவாதப் பாதையில் ஈர்க்கப்படுவதற்கும் நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிட முயலும் வெளிநாட்டுத் தீயசக்திகளால் அவர்கள் கையாளப்படுவதற்கும் எதிராக அனைத்துத் தரப்பினரும் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாதக் குழு ஒன்றின் சித்தாந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியை காவல்துறை முறியடித்துள்ளதாகக் காவல்துறை உயரதிகாரி முகம்மது காலித் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
பிப்ரவரி 14ஆம் தேதி முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், கெடா, திரெங்கானு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் நடவடிக்கையின்போது, 16 முதல் 21 வயதுக்குட்பட்ட சிறார்கள் மூவர் உட்பட ஆறு இளையர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.
மலேசியர்கள் அனைவரும் ஒற்றிணைந்து செயல்பட்டு நாட்டின் அமைதியைப் பாதுகாக்க வேண்டும் எனத் திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நாட்டில் அமைதி நிலவினாலும், நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது. தேசியப் பாதுகாப்பு அமைப்புகள் எந்தவோர் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நமது நாட்டின் அரசியல் விவகாரங்களில் பொறாமையினால் தலையிட நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகள் உள்ளன. அவற்றிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

