வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதலாம் பட்டக் கல்வி ஆண்டில் இணையவிருந்த 502 மாணவர்களின் சேர்க்கை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் விவரங்களைப் பல முன்னணி ஊடகங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் வெளியிட்டுள்ளன.
வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக இந்தத் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள் முழுமையாகச் செலுத்தப்படவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் முதலே இது தொடர்பான அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாகவும், உரிய காலக்கெடுவுக்குள் மாணவர் சேர்க்கைக் கட்டணத்தையும் நிதிக் கடப்பாடுகளையும் நிறைவுசெய்யாத மாணவர்களுக்கே இந்த அண்மைய அறிவிப்பு மின்னஞ்சல்வழி அனுப்பப்பட்டதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
பல்கலைக்கழகத்தின் இந்தத் திடீர் முடிவால் மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் சமூக ஊடகங்களில் தங்களின் வேதனையைப் பகிர்ந்துவருகின்றனர். வகுப்புகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பெரும்பாலான விடுதிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால் தாங்கள் ஓராண்டுக் கல்வியை இழக்க நேரிடும் என்று மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.
நிதியுதவி வழங்கப்படுவதற்கும் கட்டணம் இறுதி செய்யப்படுவதற்கும் இடையே காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது.
தங்களின் நிதிநிலை தவறாகப் பிரதிபலிக்கப்பட்டதாகக் கருதும் மாணவர்கள் பொருளாளர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகள் தனித்தனியாக ஆராயப்பட்டு, தகுந்த திருத்தங்கள் அல்லது சேர்க்கை மறு உறுதி செய்யப்படும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


