ஈரான் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலைத் தாக்கிய ஏமனின் ஹூதி படை

ஈரான் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலைத் தாக்கிய ஏமனின் ஹூதி படை

2 mins read
36245abb-5cee-40c7-b927-92fd3b712f17
மார்ச் 27ஆம் தேதி, ஏமனில் ஈரானுக்கு ஆதரவாக நடந்த போராட்டம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கெய்ரோ: ஈரான் மீதான போர் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில், ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி படையினர் முதல்முறையாக இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதலை சனிக்கிழமை (மார்ச் 28) நடத்தினர்.

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைகள் நிறைவடையும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்திருந்த நிலையில் ஹூதி படை இஸ்ரேலைத் தாக்கியுள்ளது.

ஹூதி படையின் தலையீடு ஈரான் போரை இன்னும் நீட்டிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அனைத்து முனைகளிலும் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் வரை தாக்குதல்கள் தொடரும் என அப்படை சூளுரைத்துள்ளது.

இதற்கிடையே, ஏமனிலிருந்து ஹூதிகள் ஏவிய ஏவுகணையை இஸ்ரேல் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்ததாகஅந்நாடு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.

அன்று தொடங்கிய இந்த மோதல் இன்று மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது மட்டுமன்றி, பணவீக்கத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

ஆயிரக்கணக்கான உயிரையும் இப்போர் பலிவாங்கியுள்ளது.

ஈரான், தங்களுக்கு ஆதரவு வழங்கிவருவோர்க்கு எதிரான போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், தாங்கள் களமிறங்கத் தயாராக இருப்பதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மார்ச் 27ஆம் தேதி தெரிவித்தனர்.

ஈரான் ஏற்கெனவே மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியுள்ள நிலையில், ஹூதிகள் இந்தப் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசென்றால், அவர்களின் அடுத்த முக்கிய இலக்கு ஏமன் கடற்கரையில் உள்ள பாப் அல்-மண்டேப் நீரிணையாக இருக்கும். சூயஸ் கால்வாய் நோக்கிய கடல்வழிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான புள்ளியாக அது உள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஏமன்ஹூதிஇஸ்ரேல்தாக்குதல்