வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிமுதல் ஈரானின் அனைத்துத் துறைமுகங்களையும் முற்றுகையிடப்போவதாகக் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் அமைதி உடன்பாடு எட்டப்படாமல் முறிந்ததை அடுத்து, அமெரிக்க ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கருத்தைத் தெரிவித்தது.
“ஈரானின் துறைமுகங்கள், கடலோரப் பகுதிகளில் பயணம் செய்ய அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் தடைகள் விதிக்கப்படும். அரேபியக் கடல், ஓமான் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும்,” என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய தளபத்தியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
விளைவுகள் கடுமையாக இருக்கும்: வல்லுநர்கள்
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ராணுவ வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.
அமெரிக்காவின் அந்த நடவடிக்கையால் ஈரான் அமைதியாக இருக்காது. அதுவும் பதில் நடவடிக்கைகளில் இறங்கும் என்பதால், சண்டைநிறுத்தம் எந்த நேரத்திலும் மீறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தையைத் தொடர ஆசியான் வலியுறுத்து
இதற்கிடையே, பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தபோதும் தங்களுக்கு இடையிலான மோதலை முடிவிற்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் எனத் தென்கிழக்காசிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
“மத்திய கிழக்கு வட்டாரத்தில் மோதலை நிரந்தரமாக முடிவிற்குக் கொண்டுவந்து, அமைதியை நிலைநிறுத்த பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டுமென அமெரிக்காவையும் ஈரானையும் வலியுறுத்துகிறோம்,” என்று ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய சண்டை காரணமாக மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க போர்நிறுத்தத்தை முழுமையாகவும் செயல்திறத்துடனும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

