அமெரிக்கா - கனடா ‘கார்டி ஹோவ்’ பாலம் ஜூலை 27ல் திறப்பு

அமெரிக்கா - கனடா ‘கார்டி ஹோவ்’ பாலம் ஜூலை 27ல் திறப்பு

2 mins read
டிரம்ப் அரசுடன் சுமுக உடன்பாடு
06b171b1-14e0-407f-a328-ee527b0c504b
அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தலையிட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் திறக்கப்படவிருந்த ‘கார்டி ஹோவ்’ அனைத்துலகப் பாலத்தின் தொடக்கத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டொராண்டோ: அமெரிக்காவின் டெட்ராய்ட், கனடாவின் வின்ட்சர் நகரங்களை இணைக்கும் புகழ்பெற்ற ‘கார்டி ஹோவ்’ அனைத்துலகப் பாலம் வரும் ஜூலை 27ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

சுங்கக் கட்டண வருவாயைப் பகிர்ந்துகொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பிடிவாதப் போக்கு தளர்ந்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

டெட்ராய்ட் நதியின் குறுக்கே ஏறத்தாழ 5.8 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி மதிப்பில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் முழுச் செலவையும் கனடா அரசே ஏற்றது.

இதனால், பாலத்தின் மூலம் கிடைக்கும் சுங்கக் கட்டண வருவாய் முழுவதையும் தாங்களே எடுத்துக்கொள்ளலாம் என கனடா திட்டமிட்டிருந்தது.

ஆனால், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, இந்த வருவாயில் தங்கள் நாட்டிற்கும் பங்கு வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது.

இதனால், கடந்த ஜூன் மாதம் நடக்கவிருந்த பாலத்தின் திறப்பு விழா தாமதமானது.

இருநாட்டு அதிகாரிகளின் தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போது புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

லாபம் பகிர்வு

பாலம் இயங்குவதற்கான செலவுகள் போக, கிடைக்கும் நிகர லாபத்தில் பாதியை அமெரிக்காவிற்கு வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது.

பாலத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு ‘15 ஆண்டு பொருளாதார மேம்பாட்டு நிதி’ ஒன்று உருவாக்கப்படும் என கனடா அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த நிதியை அமெரிக்கா கட்டுப்படுத்தும்.

கட்டணக் கட்டுப்பாடு

பாலத்தின் சுங்கக் கட்டணத்தை 10 விழுக்காட்டிற்கு மேல் உயர்த்த வேண்டுமெனில், அமெரிக்க அரசின் அனுமதியைப் பெறவேண்டும்.

கட்டுமானச் செலவு வசூலான பின்னர், வருவாயை இரு நாடுகளும் சமமாகப் பிரித்துக் கொள்ளும் என்ற அசல் ஒப்பந்தம் அப்படியே நீடிக்கும்.

தலைவர்கள் வரவேற்பு

இந்த உடன்பாட்டை மிச்சிகன் மாநில ஆளுநர் கிரெட்சன் விட்மர் வரவேற்றுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்தப் பாலம் திறக்கப்படுவது இரு நாட்டுப் பொருளியலுக்கும் பெரிய நன்மையாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
பாலம்அமெரிக்காகனடாடோனல்ட் டிரம்ப்