பெரிக்காத்தான் நேஷனலின் புதிய தலைவரானார் அஹமட் சம்சுரி மொக்தார்

பெரிக்காத்தான் நேஷனலின் புதிய தலைவரானார் அஹமட் சம்சுரி மொக்தார்

1 mins read
14ee6786-7e5e-4a12-8b23-1b4189136d4d
பாஸ் கட்சியின் உதவித் தலைவர் அஹமட் சம்சுரி மொக்தார் பெரிக்காத்தான் நேஷனலின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் புதிய தலைவராக, பாஸ் கட்சியின் உதவித் தலைவர் அஹமட் சம்சுரி மொக்தார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) நடைபெற்ற கட்சியின் உச்சநிலை அவசரக் கூட்டத்தில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

முகைதீன் யாசின் ஜனவரி 1 தேதி அப்பதவியிலிருந்து விலகியதை அடுத்து, திரெங்கானு முதலமைச்சருமான சம்சுரி தலைவராகியுள்ளார்.

முகைதீன் தலைமை தாங்கிய அந்தக் கூட்டத்தில், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ், மலேசிய இந்திய மக்கள் கட்சியான எம்ஐபிபி தலைவர் புனிதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இவ்வேளையில், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவியை பாஸ் கட்சியே தன் வசம் எடுத்துக்கொள்ளவும், கூட்டத்தில் பெரிக்காத்தான் உறுப்புக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

எனினும், அதுகுறித்து அறிவிக்க கால அவகாசம் தேவையென பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

தற்போது எதிர்கட்சித் தலைவராக உள்ள ஹம்சா சைனுடின், கடந்த வாரம் பெர்சத்து கட்சியிலிருந்தே நீக்கப்பட்டதை அடுத்து, அவரின் அப்பதவி கேள்விக்குறியாகி வந்த நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாஸ் கட்சி எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்கிறது.

குறிப்புச் சொற்கள்