காஸா சிட்டி: ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிடுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அறிவித்துள்ளார்.
இது காஸாவில் புதிய பாலஸ்தீன அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கிய நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார். தங்களின் ஆயுதங்கள் தொடர்பான அம்சங்கள், காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் கட்டங்கட்டமாக வெளியேறுவது உள்ளிட்டவற்றின் தொடர்பிலான அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக மூத்த ஹமாஸ் அதிகாரிகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
“ஆயுதங்களின் தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலியப் படைகள் கட்டங்கட்டமாக வெளியேறுவதன் தொடர்பிலும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது,” என்று மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஸா மக்களின் நலனுக்காக, அவர்களைக் கொல்லப்படுவதிலிருந்தும் வீடுகளைவிட்டு வெளியேற்றப்படுவதிலிருந்தும் காப்பாற்ற தாங்கள் விட்டுக்கொடுத்துப்போவதாக ஹமாஸ் அமைப்பின் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினரான காஸி ஹமாத் கூறினார்.
ஆகக் கடைசி நிலவரப்படி, இதுகுறித்து இஸ்ரேல் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
சமரசப் பேச்சு
எகிப்துத் தலைநகர் கெய்ரோவில் நடந்துவந்த சமரசப் பேச்சுவார்த்தையில் ஆயுதங்களைக் கைவிடுவதன் தொடர்பில் ஹமாஸ் ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாகத் தகவல் தெரிந்த ஒருவர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். அதனையடுத்து, திரு டிரம்ப் ஒப்பந்தம் குறித்து அறிவித்துள்ளார்.
“காஸாவின் ஹமாசும் ஆயுதம் ஏந்திய மற்றக் குழுக்களும் மொத்தமாக ஆயுதங்களைக் கைவிடும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை இன்று அமைதிக் குழு (Board of Peace) எட்டியுள்ளது. இது, அமைதியையும் பாதுகாப்பையும் தொடரச் செய்வதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாகும்,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார். ஆயுதங்களைக் கைவிடும் நடவடிக்கைகள் கவனமாகத் திட்டமிட்டுக் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆயுதங்கள் கைவிடப்பட்ட பிறகு இஸ்ரேலியப் படைகள் வெளியேறும். பிறகு காஸாவை அதன் மக்களுக்கும் அண்டை வட்டார மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கச் செய்ய அனைத்துலக நிலைப்படுத்தப் படை, புதிதாக அமைக்கப்படும் பாலஸ்தீனக் காவற்படையுடன் இணைந்து செயல்படும்,” என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார். எகிப்து, கத்தார், துருக்கி ஆகியவற்றைச் சேர்ந்த சமரசப் பேச்சாளர்களுக்குத் தமது நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.


