பலுசிஸ்தானில் 92 போராளிகள் கொல்லப்பட்டனர்: பாகிஸ்தான்

பலுசிஸ்தானில் 92 போராளிகள் கொல்லப்பட்டனர்: பாகிஸ்தான்

1 mins read
df1e4f34-7996-41aa-8e61-b85010c2347e
பலுசிஸ்தான் மாநிலத் தலைநகர் குவெட்டாவில் சனிக்கிழமை (ஜனவரி 31) காவல்துறை வாகனத்தின்மீது அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று அதிகாரிகள் கொல்லப்பட்டனர்; இருவர் காயமுற்றனர். - படம்: இபிஏ
Google News Preferred Icon

குவெட்டா: பாகிஸ்தான் தென்மேற்கு மாநிலமான பலுசிஸ்தானின் பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை (ஜனவரி 31) பாதுகாப்புப் படையினருடன் நடந்த சண்டையில் குறைந்தது 92 போராளிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

அந்தச் சண்டையின்போது பாதுகாப்புப் படை வீரர்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

போராளிகள் பல்வேறு பகுதிகளில் அப்பாவிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.

அதற்கு முதல்நாள் ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின்போது 41 போராளிகள் கொல்லப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான பலுச் விடுதலைப் படை சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறிய அவ்வமைப்பு, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் 84 பேரைக் கொன்றுவிட்டதாகவும் 15 மணி நேரத்திற்குமேல் சண்டை நீடித்துவருவதாகவும் குறிப்பிட்டது.

ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள பலுசிஸ்தானில் இந்தியாவின் ஆதரவுபெற்ற போராளிகள் தாக்குதல்களை நடத்தியதாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ஐஎஸ்பிஆர் கூறியது.

இந்நிலையில், போராளிகளின் தாக்குதல்களுக்குப் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். போராளிகளை முறியடித்த பாதுகாப்புப் படையினர்க்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்