ஃப்னிடெக்: மொரோக்கோவின் எல்லை நகரான ஃப்னிடெக்கிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் நுழைய ஒரே இரவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, 18 பேர் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை (ஜூலை 30) 2,000 முதல் 3,000 பேர்வரை சியூட்டாவுக்குள் நுழைந்ததாக ஸ்பெயின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது. முந்தைய ஒரு வாரத்திலேயே 1,500க்கும் மேற்பட்டோர் சியூட்டாவை அடைந்திருந்த நிலையில், புதிய வருகை அங்குள்ள நிர்வாகத்தை திணறடித்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு எல்லைப் பகுதியில் ராணுவத்தையும் காவல்துறையையும் குவித்துள்ளது.
எல்லை கடந்தவர்களில் பெரும்பாலோர் நண்பகலுக்கு முன்னரே சென்றுவிட்டதாக ஃப்னிடெக் நகர்வாசிகள் தெரிவித்தனர். “நான் தாமதமாக வந்துவிட்டேன். எல்லை முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டது,” என்று டாஞ்சியரிலிருந்து வந்த பிராஹிம் என்ற 32 வயது ஆடவர் கூறினார்.
எல்லை மூடப்பட்டதால், பலர் கடலோரப் பகுதிகள் வழியாகவும் நீந்தியும் செல்ல முயன்றனர்.
மொராக்கோ அதிகாரிகளும் பாதுகாப்புப் படைகளை அதிகப்படுத்தி, புலம்பெயர்ந்தோரைத் தொடர்ந்து விரட்டியடித்தனர்.
ஆயிரக்கணக்கானோரின் வருகை ஸ்பெயினில் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தங்குமிடங்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. குறிப்பாக, துணையற்ற சிறார்களுக்கான மையங்கள் 2,400 விழுக்காடுவரை நிரம்பியதாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் சாலைகளிலேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
சியூட்டா அல்லது மெலில்லாவை கடல் வழியாக அடைய முயற்சி செய்வோரை உடனடியாக மொராக்கோவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்ற அண்மைய நீதிமன்றத் தீர்ப்பு, பெருமளவில் மக்கள் கடல்வழியாகக் குடியேறக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சட்ட மாற்றத்தை மனிதக் கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி, பெருமளவில் கடல் வழிப் பயணங்களை ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 500,000 ஆவணமற்ற புலம்பெயர் மக்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கும் திட்டத்தை ஸ்பெயின் அரசு முன்னெடுத்து வருவதும் அரசியல் விவாதத்தை அதிகரித்துள்ளது. இந்தக் கொள்கை மேலும் பலரை ஐரோப்பாவை நோக்கி வர ஊக்குவிக்கிறது என்று பிற ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
மொராக்கோவுடன் இணைந்து சட்டவிரோதமாக எல்லையைக் கடந்தவர்களை விரைவாகத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளையும் ஸ்பெயின் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான சியூட்டா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நில வழி எல்லைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பும், 2021ல் 8,000க்கும் மேற்பட்டோர் குறுகிய காலத்தில் எல்லையைக் கடந்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி, குடியேற்ற மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு, ஷெங்கன் ஒப்பந்தத்தின் செயல்திறன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த குடியேற்றக் கொள்கைக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.


