பெட்டாலிங் ஜெயா: புதிய சமூகச் சேவைக் கட்டப்பின்கீழ் ஆறு மாநிலங்களில் குப்பை போட்ட ஏறக்குறைய 8,000 பேருக்கு குப்பைகளை அகற்றும் சமூகப் பணி தண்டனையாக வழங்கப்பட்டது.
இந்தச் சமூகச் சேவைத் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று உள்ளூர் அரசாங்க அமைச்சர் ஙா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.
அத்திட்டம், இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், கிளந்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் ஏறக்குறைய 7,919 பேர் பிடிபட்டனர்.
இதற்கிடையே பெர்லிஸ், கெடா, பினாங்கு, பாஹாங், திரங்கானு, மலாக்கா, சாபா, சரவாக், லபுவான் (கூட்டரசுப் பிரதேசம்) ஆகியவை இன்னும் புதிய முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் மத்திய அரசாங்க நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
“களத்தில் கிடைத்துள்ள முடிவுகள், நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன,” என்று திரு. ஙா விளக்கினார்.
“இந்தப் பகுதிகளில் நாம் காணும் நேர்மறையான முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, எஞ்சிய மாநிலங்களும் இந்தக் கட்டமைப்பை விரைவில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலுவாக வலியுறுத்துகிறேன்,” என்று அவர் ‘தி ஸ்டார்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
திடக்கழிவு மற்றும் பொதுத் தூய்மை நிர்வாகச்சட்டம் 2007ன்கீழ் (சட்டம் 672) அமல்படுத்தப்படும் சமூகச் சேவை ஆணை, குப்பைகளை வீசும்போது பிடிபடும் நபர்கள் சீர்திருத்தத் தண்டனையாகச் சமூகச் சேவை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
குற்றவாளிகளுக்கு 2,000 ரிங்கிட் (S$642.90) வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் நீதிமன்றங்கள் ஆறு மாதங்கள் வரை சமூகச் சேவையை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இதில் மொத்தம் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டியிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
சமூகச் சேவை ஆணையின் இறுதி நோக்கம் வெறும் தண்டனை மட்டுமல்ல, கல்வி மற்றும் குடிமை விழிப்புணர்வு என்றார் அமைச்சர் ஙா.
“அமலாக்கம் அவசியமானதாக இருந்தாலும், அதுவும் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே செல்ல முடியும். இறுதியில், குப்பைகளை முறையாக அகற்றுவது நமது மக்களின் பழக்கமாக மாறும் கலாசாரத்தை நாம் வளர்க்க விரும்புகிறோம். அந்த இலக்கை அடைவதற்கான நமது முக்கிய நடவடிக்கைகளில் சமூகச் சேவை ஆணையும் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.
மலேசியா பின்பற்ற வேண்டிய எடுத்துக்காட்டுகளாக ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

