சிட்னி: 7-லெவன் கடைகளை நிர்வகிக்கும் நிறுவனம், உலக அளவில் வர்த்தகத்தைப் பெருக்க ஆஸ்திரேலியா அடித்தளமாக அமையும் என்று கூறியிருக்கிறது.
7-லெவன் கடைகளை நிர்வகிக்கும் நிறுவனத்தை 1.7 பில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கு (S$1.5 பில்லியன்) 2024ஆம் ஆண்டு செவன் & ஐ ஹோல்டிங்ஸ் வாங்கியது. 2030க்குள் அங்கு நூற்றுக்கணக்கான புதிய கடைகளைத் திறக்க அது திட்டமிடுகிறது.
அங்குள்ள கடைகளில் இப்போது வறுத்த கோழி, பீட்சா, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவுவகைகள் முதலியவற்றைப் பார்க்க முடிகிறது. ஜப்பான் முழுதும் 7-லெவன் கடைகளில் உள்ளவற்றைப் போன்றே அங்கும் உள்ளூர் பாணியில் உணவுவகைகள் தயாரிக்கப்படுகின்றன.
ஜப்பானின் 7-லெவன் கடைகளின் மாதிரி, உலகின் மற்றப் பகுதிகளில் வெற்றிபெறுமா என்பதற்கு ஆஸ்திரேலியா சோதனைக்களமாக உள்ளது.
பேரங்காடிகளுக்கும் விரைவு-உணவுக் கடைகளுக்கும் போட்டி கொடுக்க முடிந்தால் அது ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் 7-லெவன் கடைகளை விரிவுபடுத்துவதற்கு வழிவிடும். ஆனால் அதில் தோல்விகண்டால், ஜப்பானிய பாணியை உலக அளவில் விரிவுபடுத்துவது சிரமம் என்பதற்கான அறிகுறியாக அது அமையக்கூடும்.
“எங்களின் ஆற்றலை ஆஸ்திரேலியாவில் சோதித்துப் பார்க்க எண்ணியுள்ளோம். வெற்றிபெறும் வழிகளையும் ஆராய விரும்புகின்றோம். அதுதான் எங்கள் இலக்கு,” என்று 7-லெவன் இன்ட்டர்நேஷனல், ஆஸ்திரேலிய நிறுவனம் இரண்டுக்கும் தலைவராக இருக்கும் திரு ஷின் அபே கூறினார்.
செவன் & ஐ குழுமத்தின் விற்பனையில் ஆஸ்திரேலியக் கிளைகளின் பங்கு கிட்டத்தட்ட 3.5 விழுக்காடு மட்டுமே. ஜப்பானும் அமெரிக்காவுமே அதன் முக்கியச் சந்தைகளாக இருக்கின்றன.
நிறுவனம், அதன் கிளைகளை மேலும் 10 நாடுகளுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடுகிறது. நிறுவனம், அதன் கிளைகள் செயல்படும் நாடுகளின் எண்ணிக்கையை 2030க்குள் 30க்கு உயர்த்துவது இலக்கு.
தொடர்புடைய செய்திகள்
செவன் & ஐ குழுமம், ஆஸ்திரேலியாவில் பெறப்படும் மொத்த வருவாயை 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கு உயர்த்த எண்ணியிருக்கிறது.
ஜப்பானில் 7-லெவன் கடைகள் நாடு முழுதும் இருக்கின்றன. 21,000க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் இயங்குகின்றன.

