இந்தோனீசியாவின் 7.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஒருவர் மரணம்

இந்தோனீசியாவின் 7.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஒருவர் மரணம்

2 mins read
487b1390-0c4a-45ce-ac05-a38538940eca
இந்தோனீசியாவின் வடக்கு சுலாவெசியின் மனாடோ நகரில் நிலநடுக்கத்தால் சேதமுற்றக் கட்டடம். - படம்: இபிஏ

ஜகார்த்தா: கிழக்கு இந்தோனீசியாவின் கடலோரம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) ஏற்பட்ட 7.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் மாண்டார்.

சுலாவெசி மற்றும் மலுக்குத் தீவுகளுக்கு இடையில் மொலுக்கா கடலின் ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்து சேதமடைந்தன. அதனைத் தொடர்ந்து சுனாமி அலைகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

அவர்கள் கணித்ததைப்போலவே ஐந்து இடங்களில் சுனாமி அலைகள் எழுந்ததாக இந்தோனீசியாவின் வானிலை ஆய்வு நிலையமான பிஎம்கேஜி (BMKG) கூறியது. வடக்கு சுலாவெசி வட்டாரத்தில் உள்ள வடக்கு மினாஹசாவில் முக்கால் மீட்டர் உயரத்திற்கு அந்த அலைகள் தென்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 50 அதிர்வுகள் ஏற்பட்டதைக் கண்காணிக்க முடிந்ததாகவும் ஆக அதிகமான அதிர்வின் அளவு 5.8 ரிக்டர் என்றும் அந்நிலையம் தெரிவித்தது.

முன்னதாக, 0.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரையிலான உயரத்தில் சுனாமி அலைகள் எழும் சாத்தியத்தை நிலையத்தின் தலைவர் ஃபைசால் ஃபதானி முன்னுரைத்திருந்தார்.

இருப்பினும், காலையில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை இரண்டு மணி நேரத்தில் மீட்டுக்கொள்ளப்பட்டது.

அதேபோல, பிலிப்பீன்ஸ் மற்றும் மலேசியக் கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையையும் அமெரிக்க சுனாமி கண்காணிப்பு அதிகாரிகள் திரும்பப் பெற்றனர்.

நிலநடுக்கத்தால் வடசுலாவெசியின் மனாடோ நகரில் இடிபாடுகளில் சிக்கி ஓர் ஆடவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். உள்ளூர் விளையாட்டு ஆணையத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டடத்தின் ஒருபகுதி இடிந்தபோது ஆடவர் அதில் சிக்கிக்கொண்டதாக வடசுலாவெசி காவல்துறைத் தலைவர் எவி சேத்தியோனோ செய்தியாளர்களிடம் கூறினார்.

நிலநடுக்கம் மலேசியாவின் எல்லை மாநிலமான சாபாவிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவிலும் பிலிப்பீன்ஸின் தென்பகுதிக் கடலோரத்திலிருந்து 580 கிலோமீட்டர் தொலைவிலும் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக நிலநடுக்கக் கண்காணிப்பு நிலையம் கூறியது.

இந்தோனீசியாவின் ‘மெட்ரோ டிவி’ தொலைக்காட்சியில் கட்டடங்கள் சேதமடைந்திருக்கும் காணொளி காட்டப்பட்டது. பீதியில் பொதுமக்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி ஓடியதாக மானாடோ குடியிருப்பாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுவதும் அந்தக் காணொளியில் பதிவாகி இருந்தது.

வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து 250 கிலோமீட்டர் சுற்றளவில் கடந்த ஐம்பதாண்டுகளில் 7 ரிக்டர் மற்றும் அதற்கும் அதிகமான ஒன்பது நிலநடுக்கங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வகம் கூறியது.

இருந்தபோதிலும் பெருத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றது அது.

குறிப்புச் சொற்கள்