மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 57.68 மில்லியன் ரிங்கிட் இழப்பு தவிர்ப்பு

மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 57.68 மில்லியன் ரிங்கிட் இழப்பு தவிர்ப்பு

2 mins read
2dc7db60-d9b2-4f7a-bba2-6e5853a18936
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 151 ஆண்கள் மற்றும் 36 பெண்கள் உட்பட 187 நபர்கள் கைது செய்யப்பட்டனர். - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: நாட்டில் பல அனைத்துலக இணையவழி மோசடிக் கும்பல்களைக் காவல்துறை முறியடித்துள்ளது. இதில் 57.68 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“கடந்த புதன்கிழமை (மே 6) மற்றும் வியாழக்கிழமைகளில் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட 46 ஆடம்பர வீடுகளில் பலதுறை அமைப்புக் குழு ஒன்று சோதனைகளை நடத்தியது,” என்று மலேசியக் காவல்துறைத் தலைவர் முகமது காலிட் இஸ்மாயில் கூறினார்.

“இந்த நடவடிக்கையின் விளைவாக, எல்லை தாண்டிய இணையவழி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 151 ஆண்கள் மற்றும் 36 பெண்கள் உட்பட 187 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

“அவர்களில் 129 சீன நாட்டினர், 23 பேர் மலேசியர்கள், ஒன்பது ஜப்பானிய நாட்டினர், எட்டு வியட்னாமியர்கள், ஏழு இந்தோனீசியர்கள், நான்கு லாவோஸ் நாட்டவர்கள், மூன்று தாய்லாந்து நாட்டினர், பிலிப்பீன்ஸ், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர் அடங்குவர்,” என்று அவர் வெள்ளிக்கிழமையன்று (மே 15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இணையவழி மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் பல்வேறு சொத்துக்களையும், உடைமைகளையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பிடப்பட்ட மதிப்பு RM57.68 மில்லியன் என்றும் முகமது காலிட் கூறினார்.

“முக்கியமான பறிமுதல்களில், 38 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மூன்று சொகுசு சொத்துகளும், 6.58 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 20 சொகுசு வாகனங்களும் அடங்கும்.

“மேலும், 12 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், கைப்பைகள், நகைகள், பணப்பைகள், தங்கக் கட்டிகள் அடங்கிய 67 சொகுசுப் பொருள்களையும், கைப்பேசிகள், கணினிகள், மடிக்கணினிகள் உட்பட 556 மின்னிலக்க சாதனங்களையும் நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

ஹாங்காங், சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில், போலி முதலீட்டுத் திட்டங்கள், தொலைபேசி மோசடிகள், காதல் மோசடிகள் மற்றும் இணையவழி சூதாட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கும்பல்கள் பாதிக்கப்பட்டவர்களைக் குறிவைத்ததாக அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மோசடிகாவல்துறைபறிமுதல்