அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகள் தடுத்து வைத்த 5 வயது சிறுவன் விடுதலை

அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகள் தடுத்து வைத்த 5 வயது சிறுவன் விடுதலை

2 mins read
b1269cb8-58f6-4ad8-9882-79d7f2dd6444
லியாம் கொனெஹோ ராமோஸ் என்ற ஐந்து வயது சிறுவனும் திரு ஏட்ரியன் கொனேஹோ ஆரியாஸ் என்ற சிறுவனின் தந்தையும் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள தடுப்புக் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வா‌‌ஷிங்டன்: அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வயதுச் சிறுவனும் அவனது தந்தையும் மினியாபொலிஸின் புறநகரில் உள்ள சொந்த வீட்டுக்குத் திரும்பியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

லியாம் கொனெஹோ ராமோஸ் என்ற ஐந்து வயது சிறுவனும், திரு ஏட்ரியன் கொனேஹோ ஆரியாஸ் என்ற சிறுவனின் தந்தையும் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

மினிசோட்டாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தந்தையையும் மகனையும் அதிகாரிகள் பிடித்துச்சென்றனர்.

அவர்கள் இருவரையும் விடுவிடுக்கும்படி ஜனவரி 31ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனவரி 31ஆம் தேதி இரவு தடுப்புக் காவல் வளாகத்திலிருந்து சிறுவனையும் தந்தையையும் மினிசோட்டாவுக்கு அழைத்துவந்ததாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டெக்சஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஜோகின் கேஸ்ட்ரோ சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

“லியாம் தற்போது வீட்டில் இருக்கிறான். அனைத்துப் பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களும் வீடு திரும்பும் வரை எங்கள் முயற்சியை நிறுத்தமாட்டோம்,” என்றார் திரு கேஸ்ட்ரோ.

நீல நிற தொப்பி அணிந்த லியாம் அதிகாரிகளின் பக்கத்தில் நிற்கும் புகைப்படம் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் அதிகம் பரவியது. மினியாபொலிஸ் புறநகர்ப் பகுதியில் குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட மாணவர்களில் லியாமும் ஒருவர் என்று கொலம்பியா ஹெய்ட்ஸ் பொதுப் பள்ளி வட்டாரம் தெரிவித்தது.

எக்குவடோரிலிருந்து அமெரிக்காவுக்கு சட்டபூர்வ அனுமதியுடன் அகதிகளாக வந்த லியாமும் அவரது தந்தையும் டெக்சஸில் உள்ள தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே, மினிசோட்டா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் பெரியளவிலான அமலாக்க நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் குரல் எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்துறை அமைச்சுக்கான நிதிக்கு ஜனநாயகக் கட்சியினர் உள்பட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் தர கடந்த வாரம் மறுத்துவிட்டனர்.

அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்றும் கண்காணிப்புப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும் என்றும் ஜனநாயக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்