2025ல் 5.2%: மலேசியப் பொருளியல் மூன்றாண்டு காணாத அசுர வளர்ச்சி

2025ல் 5.2%: மலேசியப் பொருளியல் மூன்றாண்டு காணாத அசுர வளர்ச்சி

2 mins read
1b054995-0219-4ed7-80b0-348c3cb77f2f
இவ்வாண்டின் பொருளியல் 4% முதல் 4.5% வரை வளரும் என்று மலேசிய அரசாங்கமும் அதன் மத்திய வங்கியும் எதிர்பார்க்கின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியப் பொருளியல் மூன்றாண்டு காணாத வேகத்தில் கடந்த ஆண்டு வளர்ந்ததாக மலேசிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வலுவான உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் அந்த வேகமான வளர்ச்சிக்கு உந்துகோல்களாக இருந்தன என்று குறிப்பிட்ட வங்கி, அதே வேகம் இவ்வாண்டிலும் தொடரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தது.

2025 ஆண்டு முழுமைக்குமான பொருளியல் வளர்ச்சி, எதிர்பார்ப்புகளையும் கடந்து, 5.2 விழுக்காட்டைத் தொட்டதாக மத்திய வங்கி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு 4 விழுக்காடு முதல் 4.8 விழுக்காடு வரையிலான வளர்ச்சியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆயினும், 2024ஆம் ஆண்டு பதிவான 5.1 விழுக்காட்டைக் காட்டிலும் வளர்ச்சி சற்று கூடியது.

அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி விகிதம் ஆக அதிகமாக கடந்த 2022ஆம் ஆண்டு 9 விழுக்காட்டைத் தொட்டது.

அதன் பிறகு கடந்த ஆண்டு வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் பதிவான வளர்ச்சி, ஓராண்டுக்கு முந்திய அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.3 விழுக்காடு வளர்ந்தது.

அது, அதற்கு முந்தைய 12 காலாண்டுகளில் காணாத அதிக வளர்ச்சி என்பதோடு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகம். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான அந்தக் காலாண்டில், கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.7 விழுக்காடு வளர்ச்சியே இருக்கும் என்று முன்னர் கணிக்கப்பட்டு இருந்தது.

அதேநேரம், மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சி 5.2 விழுக்காட்டிலிருந்து 5.4 விழுக்காடு என மேல்நோக்கித் திருத்தப்பட்டது.

பொருளியல் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு, சம்பள வளர்ச்சி மற்றும் இவ்வாண்டிற்கான அரசாங்கக் கொள்கைகள் மூலம் குடும்பச் செலவினத்திற்கு நன்மை பயக்கும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, முதலீட்டுச் செயல்பாடுகளும் ஏற்றுமதியும் வலுவான நிலையில் நீடிக்கும் என்றது அது.

இவ்வாண்டின் பொருளியல் 4 விழுக்காடு முதல் 4.5 விழுக்காடு வரை வளரும் என்று மலேசிய அரசாங்கமும் அதன் மத்திய வங்கியும் எதிர்பார்க்கின்றன.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபொருளியல்வளர்ச்சி