தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 34 மாணவர்கள் கைது

தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 34 மாணவர்கள் கைது

1 mins read
3ad14704-9da5-4a81-b86b-e023e494278c
கிளந்தானின் எல்லைப் பகுதியில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங் நகரில் உள்ள பள்ளிக்குச் சட்டத்துக்குப் புறம்பான பாதையில் மாணவர்கள் சென்றுவருவது வெளிச்சத்திற்கு வந்தது.  - கோப்புப் படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசிய அதிகாரிகள், தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 34 மாணவர்களை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) கிட்டத்தட்ட 16 மணிநேரத்திற்குத் தடுத்துவைத்தனர்.

மலேசியாவின் வட மாநிலமான கிளந்தானில் உள்ள பள்ளிக்குச் செல்ல முயன்றபோது மாணவர்கள் பிடிபட்டனர்.

அவர்கள் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தொடக்கத்தில் சந்தேகிக்கப்பட்டது. அவர்கள் அனைவருமே தாய்லாந்தில் வசித்துவரும் மலேசியர்கள் என்பது பின்னர் விசாரணையின்போது தெரியவந்ததாகக் கிளந்தான் காவல்துறைத் தலைவர் முகம்மது யூசோஃப் மாமாத் கூறினார்.

கிளந்தானின் எல்லைப் பகுதியில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங் நகரில் உள்ள பள்ளிக்குக் கள்ளப் படகுகளின் மூலம் மாணவர்கள் சென்றுவருவதும் வெளிச்சத்திற்கு வந்தது. கிளந்தான், கெடா, திரெங்கானு ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன.

பிடிபட்ட மாணவர்கள், ஏழு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

காலை ஆறரை மணிக்குத் தடுத்துவைக்கப்பட்ட அவர்கள், இரவு 10.15 மணிவாக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சட்டத்துக்குப் புறம்பான பாதையைப் பயன்படுத்தக்கூடாது என்பது மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தெரியும் என்று திரு யூசோஃப் சொன்னார்.

அந்தப் பாதை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது என்றார் அவர்.

மலேசியாவில் உள்ள பள்ளிகளுக்குச் சென்றுவருவதற்காக அன்றாடம் அந்நாட்டையும் தாய்லாந்தையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் எல்லையைக் கடக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபள்ளிகாவல்துறைமாணவர்கள்கைது