ர‌ஷ்யாவுக்கு எதிராக 21வது தடை உத்தரவு ஒப்பந்தம்

ர‌ஷ்யாவுக்கு எதிராக 21வது தடை உத்தரவு ஒப்பந்தம்

1 mins read
c59a9332-5c49-4262-b79c-e5414599cc57
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடி. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பிரசல்ஸ்: ர‌ஷ்யாமீதான தடை உத்தரவுகளைக் கொண்ட 21வது ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள் அரசியல்ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளதாக அக்கூட்டமைப்பின் அரசதந்திரிகள் நால்வர் வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவித்தனர்.

இம்முறை தடை உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி ர‌ஷ்ய எண்ணெய்க்கான அதிகபட்ச விலை உச்சவரம்பு இன்னும் ஓராண்டுக்குத் தொடரவுள்ளது.

உக்ரேன்மீது ர‌ஷ்யா படையெடுத்த பிறகு ஐரோப்பிய ஒன்றியம் 21வது முறையாகத் தடை உத்தரவு ஒப்பந்தத்தை வரைந்துள்ளது. அதில் இடம்பெறும் பல்வேறு அம்சங்களுக்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

“நமது 21வது தடை உத்தரவுகள் ஒப்பந்தம் ஆக அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகளைக் குறிவைக்கிறது. அவை எரிசக்தி, நிதிச் சேவைகள், மின்னிலக்க நாணயம், வர்த்தகம் ஆகியவை ஆகும்,” என்று ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் அண்டோனியோ கோஸ்டா இணையத்தில் தெரிவித்தார்.

கிரீசின் கப்பல் துறை நிறுவனம் ஒன்றுக்குத் தொடர்ந்து ர‌ஷ்யாவின் எல்என்ஜி இயற்கை எரிவாயுவைத் தருவிக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன் மூலம் ஒப்பந்தத்தை எட்ட இடையூறாக இருந்தக் கடைசி அம்சம் கையாளப்பட்டது என்று அரசதந்திரிகள் தெரிவித்தனர்.

ர‌ஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு அதிகபட்ச விலையைத் தீர்மானிப்பதற்கு ஒப்பந்தத்தை எட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் அரசதந்திரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதற்கென கெடு விடுக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதியைத் தாண்டியிருந்தால் விலை பெரிய அளவில் அதிகரித்திருக்கலாம்.

ஒப்பந்தத்தின்படி ஓராண்டுகாலத்துக்கு ஒரு பீப்பாய் ர‌ஷ்ய கச்சா எண்ணெய்யின் விலை 44 டாலராக (56.78 வெள்ளி) இருக்கும்.

குறிப்புச் சொற்கள்