2019-2025: முஸ்லிம் அல்லாத 55,000 மலேசியர்கள் வெளிநாட்டினரை மணமுடித்தனர்

2019-2025: முஸ்லிம் அல்லாத 55,000 மலேசியர்கள் வெளிநாட்டினரை மணமுடித்தனர்

2 mins read
பட்டியலின் மூன்றாமிடத்தில் சிங்கப்பூரர்கள்
2862a27d-d71e-4d36-9c8e-07fa31310fb0
2019 முதல் 2025 ஜூலை வரையிலான காலகட்டத்தில், சிங்கப்பூர் ஆண்கள் 5,910 பேரும் பெண்கள் 2,892 பேரும் முஸ்லிம் அல்லாத மலேசியர்களை மணமுடித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: கடந்த 2019 முதல் 2025 ஜூலைவரை, முஸ்லிம் அல்லாத மலேசியர்கள் 9,195 பேர் சீன நாட்டினரை மணம்புரிந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் அல்லாத 55,458 மலேசியர்கள் வெளிநாட்டவரை மணம்புரிந்தனர் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் புதன்கிழமை (பிப்ரவரி 11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அப்பட்டியலில் வியட்னாமியர் இரண்டாமிடத்தில் உள்ளனர். முஸ்லிம் அல்லாத 8,620 மலேசியர்கள் வியட்னாமியப் பெண்களை மணந்தனர்.

முஸ்லிம் அல்லாத மலேசியர்களை மணந்தோர் பட்டியலில் சிங்கப்பூரர்கள் மூன்றாம் நிலையில் உள்ளனர். ஆண்கள் 5,910, பெண்கள் 2,892 எனச் சிங்கப்பூரர்கள் 8,802 பேர் முஸ்லிம் அல்லாத மலேசியர்களை மணமுடித்தனர்.

தாய்லாந்து (5,186), இந்தோனீசியா (4,263) நாட்டினர் முறையே நான்காம், ஐந்தாம் நிலைகளைப் பிடித்தனர்.

ஒட்டுமொத்தத்தில், இந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்த 36,066 பேர் முஸ்லிம் அல்லாத மலேசியத் துணைவர்களைத் தேடிக்கொண்டனர்.

மலேசியர்களை மணந்தவர்கள் நீண்டகால சமூக வருகை அட்டை (எல்டிஎஸ்விபி) கோரி விண்ணப்பம் செய்யலாம் என்று திரு நசுத்தியோன் குறிப்பிட்டார்.

அவர்கள் மலேசியாவில் சட்டபூர்வமாகத் தங்கியிருக்க அந்த வருகை அட்டை அனுமதிக்கிறது.

ஆயினும், அந்த அட்டையைப் பெற்றவர்கள் மலேசியாவில் வேலை செய்ய அனுமதி பெற்றதாகக் கருத முடியாது என்றும் அதற்குத் தனியாக வேலை அனுமதி அட்டை பெற வேண்டும் என்றும் அமைச்சர் நசுத்தியோன் சுட்டினார்.

ஒருவேளை மலேசியத் துணைவர் இறந்துபோனால், அவரின் கணவர் அல்லது மனைவி கைம்மணாளன் (widower) அல்லது கைம்பெண் (widow) அனுமதி அட்டைக்கு அல்லது நிரந்தரவாசத் தகுதி கோரி விண்ணப்பம் செய்யலாம்.

முன்னர், திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது அது மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுவிட்டது. ஆயினும், விண்ணப்பதாரர் குறைந்தது ஓராண்டேனும் சமூக வருகை அட்டையில் இருந்திருக்க வேண்டும்.

இந்நிலையில், “நீண்டகால சமூக வருகை அட்டை தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்ய இப்போதைக்குத் திட்டமில்லை. ஆயினும், குடும்பநலம், குழந்தைகளின் நலன்கள், தேசியக் குடிநுழைவுக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், அதன் அமலாக்கம் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்படும்,” என்று அமைச்சர் நசுத்தியோன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமுஸ்லிம்திருமணம்சிங்கப்பூர்நாடாளுமன்றம்உள்துறை அமைச்சு