நஞ்சான இலவச சத்துணவு; 200 மாணவர்கள் பாதிப்பு

நஞ்சான இலவச சத்துணவு; 200 மாணவர்கள் பாதிப்பு

1 mins read
23f73716-0c14-4fc6-8582-d95134c8e4a9
2025 அக்டோபர் 30ஆம் தேதி பண்டா அச்சேயில் இலவச மதிய உணவுக்கு முன்பு இறைவனைத் தொழுத மாணவர்கள். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசிய அரசின் இலவச சத்துணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர்.

வடக்கு சுமத்ராவில் சிடிகாலாங்கில் உள்ள இரு பள்ளிகளின் மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர்.

பிப்ரவரி 10ஆம் தேதி எஸ்எம்கே எச்கேபிபி சிடிகாலாங் தொழிற்பயிற்சிப் பள்ளியில் நச்சு உணவை உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 159 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வாந்தி, பேதி, வயிற்றுவலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக பள்ளி அதிகாரிகள் கூறினர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி 76 மாணவர்கள் பள்ளிக்கு வராததால் நச்சுணவு பற்றித் தெரியவந்ததாக பள்ளி முதல்வர் மேலன்டன் சிராய்ட் கூறினார். காலை ஒன்பது மணியளவில் பள்ளிக்கு வந்த மற்ற மாணவர்களுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் சொன்னார்.

முந்திய நாளன்று சோறு, கோழிக்கறி, லெட்டூஸ், வெள்ளரிக்காய்த் துண்டுகள், வாழைப்பழம் ஆகியவை அடங்கிய 720 இலவச உணவுப் பொட்டலங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களில் 159 பேர் மட்டுமே அந்த உணவைச் சாப்பிட்டனர். அவர்களில் பலருக்கு உணவு நச்சுக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின என்று பிப்ரவரி 11ஆம் தேதி திரு சிராய்ட் கூறினார்.

நச்சுணவால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான யோஹானி ஹுடாபாரத், தமக்கு வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகக் கூறினார். அடுத்த நாள் விடியற்காலை அறிகுறிகள் தென்பட்டதாகவும் சிடிகாலாங் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்