1எம்டிபி நிதி மோசடி வழக்கு: நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுச் சிறை

1எம்டிபி நிதி மோசடி வழக்கு: நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுச் சிறை

3 mins read
9fa1fc02-a30a-4378-9b85-c8220b97c713
நஜிப் ரசாக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அன்வார் அரசாங்கத்தில் பதற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 1எம்டிபி நிதி மோசடி வழக்கில் 15 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு 11.4 பில்லியன் ரிங்கிட் (S$3.62 பில்லியன்) அபராதமும் விதிக்கப்பட்டது. அதைச் செலுத்தாவிட்டால் மேலும் 40 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்கவேண்டியிருக்கும். முந்தைய வழக்கின் சிறைவாசம் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுற்றதும் புதிய தண்டனைக்காலம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக நஜிப், குற்றவாளி என்று மலேசிய உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) தீர்ப்பளித்தது.

1எம்டிபியின் 2.3 பில்லியன் ரிங்கிட் நிதியை (S$727 மில்லியன்) முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நீண்டகால வழக்கு இத்துடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

திரு நஜிப் மொத்தம் 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். அவற்றில் 21 குற்றச்சாட்டுகள் பண மோசடி தொடர்பானவை. நான்கு குற்றச்சாட்டுகள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பானவை. அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாக நீதிபதி கோலின் லாரன்ஸ் செக்குவேரா கூறினார்.

72 வயது நஜிப்புக்கு நிதியைக் கையாளும் முழுக் கட்டுப்பாடும் இருந்தது. நிதிப் பரிவர்த்தனைகளை அரசியல் நன்கொடைகளாகக் கருத முடியாது. நஜிப்பின் ஆலோசகர்கள் அவருக்குத் தவறாக வழிகாட்டியதாகக் கூறப்படுவதையும் ஏற்க முடியாது. இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டதாகவும் இல்லை என்று நீதிபதி தெளிவாகத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பை வாசிக்க நீதிபதி ஏறக்குறைய நான்கு மணி நேரம் எடுத்துக் கொண்டார். மேலும் இந்தத் தீர்ப்பால், பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்னோ கட்சியால் அரசியல் பதற்றம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்பு அம்னோவின் தலைவராக இருந்தவர் நஜிப்.

மற்றொரு வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் அவர், எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். அண்மையில் அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இது, அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் பதற்றத்தைத் தூண்டியிருந்தது.

நீதிபதி செக்குவேரா, 2.3 பில்லியன் ரிங்கிட் நிதி அரசியல் நன்கொடையாக வந்தது என்ற கூற்றை நிராகரித்துள்ளார். அதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட அரபு நன்கொடைக் கடிதங்கள் போலியானவை என்றார் அவர்.

முன்னாள் ஆம்பேங்கின் வாடிக்கையாளர் நிர்வாகியான ஜோயன்னா யூ கிங் பிங் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் வழக்கறிஞர் ஜாஸ்மின் லூ அய் சுவான் ஆகியோரின் சாட்சியங்கள் மூலம் இது உறுதியாகியுள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டார். லண்டனில் உள்ள மேஃபேர் ஹோட்டலில் கணினி மின்திரையில் கையெழுத்திடாத நன்கொடைக் கடிதங்களில் ஒன்றைத் திருவாட்டி லூ பார்த்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நான்காவது கடிதத்தில் ஆம்பேங்கின் சின்னம் இருந்தபோதும் தேதியில்லை என்றார் அவர்.

திரு நஜிப், ஒரு பிரதமராக, நிதியமைச்சராக 1எம்டிபியின் ஆலோசகராகத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பெரும் பணத்தைத் தமது சொந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

அரசுத் தரப்பிலிருந்து வங்கிப் பதிவுகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட சாட்சியங்கள், ஆவணங்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜோ லோ என்று அழைக்கப்படும் வர்த்தகர் லோ டேயிக் ஜோவைக் காவல்துறை தேடிவருகிறது.

குறிப்புச் சொற்கள்