ஜப்பானில் 1,319 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகினர்

ஜப்பானில் 1,319 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகினர்

1 mins read
c726f46c-7297-424b-9c0e-4dbc3d8d238c
சிறப்புத் தேவை உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஆசிரியர்கள் மீதான பணிச்சுமையும் மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. - படம்: புளூம்பெர்க்
Google News Preferred Icon

தோக்கியோ: ஜப்பானில் 2024ஆம் நிதியாண்டில் 1,319 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மனநலப் பிரச்சினைகளைக் காரணமாகக் கூறி தங்களது பணிகளிலிருந்து விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் கல்வி அமைச்சின் இடைக்காலக் கருத்தாய்வு முடிவுகள் அதனைக் காட்டின.

2009ஆம் நிதியாண்டில் அக்கருத்தாய்வில் மனநலம் பற்றிய கேள்வி சேர்க்கப்பட்டதிலிருந்து, மனநலத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 2021ஆம் நிதியாண்டில் நடத்தப்பட்ட முந்தைய கருத்தாய்வுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டின் எண்ணிக்கை 39 விழுக்காடு அதிகம்.

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்துவருகிறது. சிறப்புத் தேவையுடைய மாணவர்களின் எண்ணிக்கையும் கூடுவதால், ஆசிரியர்கள் மீதான பணிச்சுமை அதிகரித்துவருவதைப் பணி விலகுவோர் எண்ணிக்கை உயர்வு பிரதிபலிக்கிறது.

மூவாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் அந்தக் கருத்தாய்வின்படி, மனநலக் காரணங்களுக்காக ஆசிரியர்கள் பணியை விட்டு விலகும் விகிதத்தின் அதிகரிப்பு, அக்கருத்தாய்வு தொடங்கப்பட்டதிலிருந்து இல்லாத அளவுக்கு ஆக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.

2024ஆம் நிதியாண்டில், பணி ஓய்வைத் தவிர்த்து, பிற காரணங்களுக்காக 15,540 ஆசிரியர்கள் தங்களது பணிகளை விட்டு விலகினர்.

அவர்களில் பலர், கல்வி வாரியங்களுக்கு மாறிச்செல்வது உட்பட வேறு வேலைகளுக்குச் செல்வது பொதுவான காரணமாகக் குறிப்பிடப்பட்டது. அத்தகையோரின் எண்ணிக்கை முந்தைய கருத்தாய்வைக் காட்டிலும் 26 விழுக்காடு அதிகரித்து 5,080ஆகப் பதிவானது.

குடும்பக் காரணங்களைக் குறிப்பிட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 23 விழுக்காடு அதிகரித்து 3,569ஆக உள்ளது.

மனநலப் பிரச்சினைகளைக் காரணமாகக் கூறி 801 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் 365 நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் 153 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் வேலையிலிருந்து விலகினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்