பெட்டாலிங் ஜெயா: மலேசியா, கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 12,000 ஆசிரியர்களை இழந்துள்ளது.
விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு காரணமாக அவர்களில் பெரும்பாலோர் வேலையிலிருந்து விலகுகின்றனர்.
2023ஆம் ஆண்டு முதல் 2025 வரை பொதுச் சேவைத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட விருப்ப ஓய்வு, சராசரியாக 5,249 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு ஸ்டார்எடுவிடம் தெரிவித்ததாக ‘த ஸ்டார்’ நாளிதழ் குறிப்பிட்டது.
இது, கல்வி அமைச்சின் 437,484 மொத்த ஆசிரியர்களில் 1.20 விழுக்காட்டைப் பிரதிநிதிக்கிறது.
ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறத் தூண்டும் முக்கிய அம்சங்களில், ஆர்வமின்மை 61.98 விழுக்காட்டுடன் மிகப்பெரிய காரணமாக உள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.
குடும்பம் சார்ந்த காரணங்கள் (19.57%), உடல்நலப் பிரச்சினைகள் (8.57%), பணிச்சுமை (7.61%), தனிப்பட்ட பிரச்சினைகள் (2.27%) ஆகியவை மற்றக் காரணங்களாகும்.
இதற்கிடையே, இதே காலகட்டத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 7,280 ஆசிரியர்கள் கட்டாய ஓய்வு பெற்றனர். இது, மொத்தப் பணியாளர்களில் 1.63 விழுக்காடு.
ஆசிரியர்களின் வயது அதிகரித்து வருவதும் மற்றொரு காரணம்.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 29 ஆம் தேதி நிலவரப்படி, மனிதவள நிர்வாகத் தகவல் அமைப்பின் தகவலின்படி 41 வயதைக் கடந்த 45 வயதுக்குட்பட்ட 90,431 ஆசிரியர்கள் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றனர். அவர்களுக்கு அடுத்ததாக 46 முதல் 50 வயது வரையிலான பிரிவினரும் (76,071) 51 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்களும் (67,954) உள்ளனர்.
ஆனால் 21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளம் ஆசிரியர்களின் எண்ணிக்கை 13,968ஆக உள்ளது.
மார்ச் 31ஆம் தேதி வரையிலான தரவுகளின் அடிப்படையில், நாடு தழுவிய பள்ளிகளில் கற்பித்தலும் கற்றலும் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுவதாக அமைச்சு கூறியது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளில் ஆசிரியர்கள் போதுமான அளவில் இருக்கின்றனர். தற்போதைய தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அது தவிர, பள்ளி அளவில் ஆசிரியர் தேவையை உறுதி செய்வதற்காக ஆசிரியர் நியமன நிர்வாக முறை அவ்வப்போது சரி செய்யப்படுகிறது என்று அது மேலும் தெரிவித்தது.

