வெளிநாட்டு கிரிக்கெட் அணியில் சரளமாகப் புழங்கும் தமிழ்மொழி

வெளிநாட்டு கிரிக்கெட் அணியில் சரளமாகப் புழங்கும் தமிழ்மொழி

2 mins read
adad01df-bf31-4a28-b343-73b910c56758
19 வயதிற்குட்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி ஷஃபாலி வர்மாவுடன் (வலது) யுஏஇ அணித்தலைவி தீர்த்தா சதீஷ். படம்: ஐசிசி -
Google News Preferred Icon

பெனோனி (தென்னாப்பிரிக்கா): தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் இம்மாதம் 16ஆம் தேதி திங்கட்கிழமை இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின்போது தமிழ்மொழி ஒலித்தபடியே இருந்தது.

'பரவால்ல, நல்லாப் போடுற', 'அப்பிடியேதான் போயிட்டிரு', 'வைஷு, பின்னாடிலேர்ந்து கொண்டுவா', 'இந்து, கொஞ்சம் மாறி போட்டுரு', 'வரும் வரும்' - இப்படி 'ஸ்டம்ப்'பிற்குப் பின்னாலிருந்து தமிழ்க்குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இந்திய அணியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து இப்படி ஒலிக்கவில்லை. மாறாக, இந்திய அணிக்கெதிரான போட்டியின்போது ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) அணியின் தலைவியும் விக்கெட் காப்பாளருமான தீர்த்தா சதீஷ்தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

சென்னையில் பிறந்த 18 வயது தீர்த்தா, 2018ஆம் ஆண்டு வெளியான 'கனா' திரைப்படத்தைப் பார்த்து, கிரிக்கெட்டில் தீவிரமாக இறங்கிய இவர், இப்போது 19 வயதிற்குட்பட்டோருக்கான 'யுஏஇ' மகளிர் அணியின் தலைவியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.

இவர் அறிவுறுத்திய வைஷ்ணவி மகேஷ், இந்துஜா நந்தகுமார் இருவரும் சென்னையில் பிறந்தவர்கள்தான்.

உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபெற்றுள்ள யுஏஇ அணியில் இடம்பெற்றுள்ள 15 பேரும் இந்தியர்களே. அவர்களில் 11 பேர் சரளமாகத் தமிழ் பேசக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்திய அணி வீராங்கனைகளில் ஒருவர்கூட தமிழர் இல்லை.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் யுஏஇ அணி 122 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது. முன்னதாக, ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில் யுஏஇ வென்றிருந்தது.

மொத்தம் 16 அணிகள் நான்கு பிரிவுகளாகப் போட்டியிடும் உலகக் கிண்ணத் தொடரில் யுஏஇ, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளன.

கடந்த 14ஆம் தேதி தொடங்கிய 19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் வரும் 29ஆம் தேதியுடன் நிறைவுறும்.

செய்தி: இஎஸ்பின்கிரிக்இன்ஃபோ