பிரதமர் லீ: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள புதிய நிதிமுறை தேவை

பிரதமர் லீ: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள புதிய நிதிமுறை தேவை

2 mins read
f814f1c9-0891-4774-8e7f-fe1e95d92773
ஜி20 உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் பருவநிலை மாற்றத்தைக் கையாளும் வழிகளைப் பற்றி உரையாற்றினார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
Google News Preferred Icon

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனியார், அரசாங்க நிதிகளை இணைக்கும் புதிய நிதி அமைப்பு முறை தேவை என்று ஜி20 உச்சநிலை மாநாட்டில் உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் லீ சியன் லூங் அறைகூவல் விடுத்துள்ளார்.

உலகளவில் கரியமிலவாயு வெளியேற்றச் சமநிலையை 2050ஆம் ஆண்டுக்குள் அடைய ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கில் முதலீடுகள் தேவை என்றும் அரசாங்கங்கள் மட்டுமே இதை செய்யமுடியாது என்றும் தனியார் நிதி தேவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றுவரும் ஜி20 உச்சநிலை மாநாட்டின் முதல் கூட்டத்தில் பிரதமர் லீ சனிக்கிழமை காலை உரையாற்றினார்.

நட்பு நாடாக சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்ததற்கு இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி நல்கியதோடு, சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதற்கும் ஆதித்யா-எல்1 சூரிய ஆய்வுக்கோளை அனுப்பியதற்கும் இந்தியாவிற்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் பிரதமர் லீ.

பொது, தனியார், நன்கொடை துறைகளிலிருந்து பசுமையையும் உருமாற்றத்தையும் ஊக்குவிக்கும் நிதிகளை ஒருங்கிணைத்து விரிவாக்கும் கலப்பட முறையிலான நிதித் தளத்தை சிங்கப்பூர் ஆராய்ந்துவருவதாக உலகத் தலைவர்களிடம் பிரதமர் கூறினார்.

இந்த முயற்சியில் ஆர்வமுள்ளவர்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், புதிய நிதிமுறை தவிர புதிய தொழில்நுட்பங்கள், புதிய சந்தைகள் என மேலும் இரு வழிகளில் ஜி20 நாடுகள் தலைமையில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வழிகளைப் பரிந்துரைத்தார்.

அந்த மூன்று வழிகளுக்குமே அனைத்துலக ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என்றும் ஜி20 அதற்கான தலைமைத்துவத்தை வழங்க முடியும், வழங்கவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

“நாடுகளின் கரிமநீக்க வழிமுறைகளுக்கு ஹைட்ரஜனும் ‘சிசியுஎஸ்’ எனப்படும் கரிமக் கவர்வு, பயன்பாடு மற்றும் சேமிப்பும் முக்கியக் கூறுகளாக விளங்குகின்றன,” என்றார் பிரதமர் லீ.

நம்பகத்தன்மையும் மீள்திறனுமுடைய உலகளாவிய விநியோகச் சங்கிலியை அனைத்துலகப் பங்காளிகளுடன் செயல்படுத்தினால்தான் ஹைட்ரஜனை பெரிய அளவில் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது என்று கூறிய பிரதமர் லீ, எந்த நாடும் தனியாக அதைச் செய்ய முடியாது என்றார்.

எரிசக்தித் துறையைப் பசுமையாக்க தேசிய ஹைட்ரஜன் உத்தியைச் சிங்கப்பூர் அமைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார் திரு லீ.

குறிப்புச் சொற்கள்