ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

3 mins read
7098d44e-e2d1-45c9-934e-2deebdf0008e
பிரதமர் லீ சியன் லூங் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் லீ சியன் லூங் பயணம் மேற்கொள்கிறார்.

ஜி20 தலைமைத்துவத்தை இவ்வாண்டு ஏற்றிருக்கும் இந்தியா, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ எனும் கருப்பொருளைக் கொண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதும் நீடித்த நிலைத்தன்மைமிக்க மேம்பாட்டு குறிக்கோள்களை அடைய முயற்சிகளை முடுக்கிவிடுவதும் அதன் நோக்கம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் லீ, சட்டத்தின் அடிப்படையிலான பன்முனை உறவுகளின் அவசியம், மின்னிலக்க பொது உள்கட்டமைப்பு, சுகாதாரம், எரிசக்தி உருமாற்றம், நீடித்த நிலைத்தன்மையுடனான மேம்பாடு குறித்த கலந்துரையாடல்களில் பங்கெடுப்பார். இந்தப் பயணத்தில் மற்ற நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து இருநாட்டுச் சந்திப்புகளைப் பிரதமர் நடத்துவார்.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு குறித்த வேறுபட்ட கருத்துகள், இந்தியா-சீனா எல்லை பதற்றம் ஆகிய அம்சங்கள் இந்த உச்சநிலை மாநாட்டில் முக்கிய அங்கம் வகித்து மாநாட்டின் முடிவில் புரிந்துணர்வை எட்ட சவாலாக அமையும் என்று சில கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர். சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

உலகின் பெரிய, வளர்ந்துவரும் பொருளியல்களைக் கொண்ட 19 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு 1999ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கிட்டத்தட்ட 85%, உலக மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கையும் இந்த அமைப்பு உள்ளடக்குகிறது.

கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலுக்குப் பின் அதீத பணவீக்கம், பொருளியல் நிலைத்தன்மையின்மை போன்ற உலகை உலுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முனைப்பிலும் வளர்ந்த நாடுகள் சுத்தமான எரிசக்தி குறிக்கோள்களை அடைவதற்கான நிதியை அமைப்பதிலும் ஜி20 நோக்கம் கொண்டுள்ளது.

உறுப்பு நாடாக இல்லாத போதிலும் சந்திப்புகளுக்கு இவ்வாண்டு சிங்கப்பூர் நட்பு நாடாக அழைக்கப்பட்டது. பங்ளாதேஷ், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், ஸ்பெயின், ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய இதர எட்டு நாடுகளும் இந்தியத் தலைமைத்துவத்தின்கீழ் நட்பு நாடுகளாக இவ்வாண்டு ஜி20 சந்திப்பில் கலந்துகொள்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக பண நிதியம், உலக வங்கி, ஆசியான், ஆப்பிரிக்க ஒன்றியம், ஆசிய மேம்பாட்டு வங்கி முதலிய அனைத்துலக அமைப்புகளும் கலந்துகொள்கின்றன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் லி சியாங், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் முதலிய தலைவர்கள் இந்த உச்சநிலை மாநாட்டில் பங்கெடுக்கின்றனர்.

55 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தை 21வது உறுப்பினராக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நிகராக ஜி20ல் இணைக்க திரு மோடி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் லீயுடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா, பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சு, வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

திரு லீயின் பயணத்தின்போது துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இடைக்கால பிரதமராகப் பொறுப்பு வகிப்பார் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்