நோயாளிகள் மாதம் தலா $9,600 வரை கோரலாம்
புற்றுநோய் நோயாளிகள் அடுத்த ஆண்டுமுதல் தங்களின் வெளிநோயாளி சிகிச்சைக்கான கட்டணத்தில் கூடுதல் உதவி பெறலாம். அவர்களுக்கான மருந்தைப் பொறுத்து, மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தின்கீழ் மாதம் $200 முதல் $9,600 வரை வழங்கப்படலாம்.
தற்போது இத்தகைய நோயாளிகளுக்கு மாதம் தலா $3,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை அடுத்த ஆண்டுமுதல் மாறவுள்ளது.
இத்துடன் அரசாங்க மானியத்திற்கு மேலும் அதிகமான புற்றுநோய் சிகிச்சைகள் தகுதிபெறவுள்ளன. 'மருந்து உதவி நிதி'த் திட்டத்தின்கீழ் விலை அதிகமான மருந்துகள் சிலவற்றுக்கு அரசாங்கம் மானியம் வழங்கவுள்ளது. இதற்காக தனிநபர் மாத வருமானம் தகுதிநிலை $2,800லிருந்து $6,500க்கு உயர்த்தப்படும். இம்மாற்றங்களால் மானிய உதவி பெற்றுள்ள புற்றுநோய் நோயாளிகள், அடுத்த செப்டம்பர் மாதம் முதல் தங்களின் வெளிநோயாளி சிகிச்சைக்கான முழு கட்டணத்தைக் காப்புறுதி மற்றும் மெடிசேவ் திட்டம் வழி செலுத்துவர். தற்போது நோயாளிகளில் 70 விழுக்காட்டினருக்கு மட்டுமே இந்த நிலை உள்ளது.
புற்றுநோய் தொடர்பான பராமரிப்புக்கு அதிகச் செலவாவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை மெடிஷீல்டு லைஃப் மன்றம் அமைத்தது. மெடிஷீல்டு லைஃப் திட்டத்தின்கீழ் கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் பலன் தரும் வெளிநோயாளி புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகள் யாவை என்பதைப் பட்டியலிடுமாறு சுகாதார அமைச்சுக்கும் மன்றம் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் 'ஐபி'கள் எனப்படும் ஒருங்கிணைந்த ஷீல்டு காப்புறுதித் திட்டங்களின்கீழ் தனியார் சுகாதாரப் பராமரிப்பு சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்முதல் இப்பட்டியலில் இல்லாத மருந்து தொடர்பில் தொகை கோர இயலாது.
இருப்பினும் இப்புதிய விதிமுறைகள் துணைக் காப்புறுதிகளுக்குப் பொருந்தாது. இத்தகைய துணைக் காப்புறுதிகள், நோயாளியின் மருத்துவச் செலவில் ஒரு பகுதியை அல்லது முழுமையாக கட்டக்கூடியதாகும்.
'ஐபி'க்கான சந்தாவை மெடிசேவ் மூலம் செலுத்துவதும் துணைக் காப்புறுதிக்கான சந்தா ரொக்கமாகச் செலுத்துவதும் இதற்குக் காரணமாகும்.
'மெடிஷீல்டு லைஃப்' காப்புறுதித் திட்டத்திற்கும் மேல் சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களைக் கூடுதல் பலன்கள் கூடியதாக தனியார் காப்புறுதி நிறுவனங்கள் வழங்குவதுதான் 'ஐபி'.
மற்ற மருத்துவ சிகிச்சைகளைக் காட்டிலும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான கட்டணக் கோரிக்கைகள் துரிதமாக பன்மடங்காகி விட்டதால் மன்றம் இதில் கவனம் செலுத்தியது. இதன்படி மற்ற மருந்துகளுக்கான செலவு, ஆண்டு அடிப்படையில் ஆறு விழுக்காடு அதிகரிக்க, புற்றுநோய் மருந்துக்கான செலவு 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் மருந்துகளுக்கான செலவில் புற்றுநோய் மருந்துக்கு மட்டும் 24% செலவாவதாக அறியப்படுகிறது.
இந்த அதிகரிப்பு தொடர்ந்தால், 2030ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய்க்கான மருந்துகளுக்குச் செலவிடப்படும் தொகை $2.7 பில்லியனை எட்டிவிடும் என்று மன்றம் முன்னுரைத்துள்ளது.
புற்றுநோய் மருந்துகளுக்கான செலவு அதிகரித்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. கூடுதல் நபர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது அவற்றில் ஒன்று. கடந்த ஆண்டில் மட்டும் 29,100 பேர் தங்களின் வெளிநோயாளி புற்றுநோய் மருந்து சிகிச்சைக்காக 'மெடிஷீல்டு ஃலைப்' திட்டத்தின்கீழ் மொத்தம் $168 மில்லியன் கோரியிருந்தனர்.
மருத்துவ நிறுவனங்கள், சிங்கப்பூரிடம் புற்றுநோய் மருந்துகளுக்கான விலையை அதிகப்படுத்தி விற்பதும் மற்றொரு காரணமாகும். இந்நிலையில், கிட்டத்தட்ட 150 மருந்துகளைக் கொண்ட பட்டியல், சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரம் - பக்கம் 2ல்

