ஷெங் சியோங் நிறுவன ஊழியர்களுக்கு 16 மாத சம்பளம் வரை போனஸ்

ஷெங் சியோங் நிறுவன ஊழியர்களுக்கு 16 மாத சம்பளம் வரை போனஸ்

2 mins read
39772cf6-d518-4c8a-af0c-36df3b272561
ஷெங் சியோங் ஊழியர்கள், 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்தர சம்பள நிரப்புத்தொகை (AWS) உட்பட மொத்தம் 16 மாத ஊதியம் வரையிலான தொகையை போனசாக (ஊக்கத் தொகை) பெற உள்ளனர். படம்: பெரித்தா ஹரியான் -
Google News Preferred Icon

ஷெங் சியோங் ஊழியர்கள், 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்தர சம்பள நிரப்புத்தொகை (AWS) உட்பட மொத்தம் 16 மாத ஊதியம் வரையிலான தொகையை போனசாக (ஊக்கத் தொகை) பெற உள்ளனர்.

மாறுபடும் ஊக்கத்தொகையை (variable bonus) அந்த நிறுவனத்தின் லாபத்தில் 20 விழுக்காடாக (வரிக்கு முன்பு) உயர்த்தி இருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் கடந்த வாரம் அனுப்பிய செய்தியில், "கடந்த ஆண்டுகளைவிட மிக மிக சிறப்பாகச் செயல்பட்டதை," அங்கீகரிக்கும் விதமாக இந்த மாபெரும் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. கொவிட்-19 சூழல் காரணமாக கடைகளில் விற்பனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

தகுதி பெற்ற பகுதி நேர ஊழியர்களுக்கு 4.68 மாத சம்பளம் (AWS உட்பட) முதல் துணை மேலாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ளவர்களுக்கு 15.72 மாத சம்பளம் வரை போனஸ் வழங்கப்பட உள்ளது.

இந்த ஊக்கத்தொகையின் ஒரு பகுதி கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய தொகை மார்ச் 2021ல் வழங்கப்படும்.

கடந்த ஆண்டுக்கான முழுமையான வரவு செலவு கணக்கை ஷெங் சியோங் இன்னும் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த 9 மாத காலத்தில் அந்த நிறுவனத்தின் லாபம், 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 83.3 விழுக்காடு, அதாவது $107 மில்லியன் அதிகரித்தது. அதன் வருமானம் 44.6% அதிகரித்து $1.07 பில்லியன் ஆனது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் குவித்ததுடன், வீடுகளிலேயே சமைக்கவும் செய்தனர். தற்போது வீட்டிலிருந்தே வேலை செய்யும் போக்கு தொடர்வதை அடுத்து, ஷெங் சியோங்கில் விற்பனை தொடர்ந்து வலுவடைந்தது குறிப்பிடத்தக்கது.