'சிங்கப்பூரில் 14,000 நிறுவனங்கள் 50,000 பேரை வேலைக்கு அமர்த்தின'

'சிங்கப்பூரில் 14,000 நிறுவனங்கள் 50,000 பேரை வேலைக்கு அமர்த்தின'

2 mins read
5a7ef8c7-164e-456e-9df0-4c90b592cd1b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் மூலம் 14,000 நிறுவனங்கள் கிட்டத்தட்ட 50,000 பேரை வேலையில் அமர்த்தியிருப்பதாக முன்னோடி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

புதிதாக வேலையில் சேர்க்கப்பட்டோரில் ஏறக்குறைய பாதிப் பேர் 40 வயதும் அதற்கும் மேற்பட்டவர்கள்.

நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், அந்த ஊழியர்களின் ஊதியம் தொடர்பில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் மூலம் $1 பில்லியன் ஒதுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளூர் ஊழியர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு, ஓராண்டு காலத்திற்கு அவ்வூழியர்களின் மாத ஊதியத்தில் முதல் 5,000 வெள்ளியில் 25% மானியம் வழங்கப்படும்.

அதே நேரத்தில், ஊழியர்கள் 40 வயதும் அதற்கும் மேற்பட்டவராக இருந்தால் அந்த மானியம் 50 விழுக்காடாக இருக்கும்.

இந்தப் புள்ளிவிவரங்கள் நல்லதொரு தொடக்கத்தைப் போல ஊக்கமளிக்கின்றன என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார்.

"கொவிட்-19 தொற்று ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து நிறுவனங்களின் மீட்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். சில நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தடுமாறலாம். மற்ற நிறுவனங்கள் புதிய வளர்ச்சி நடவடிக்கைகளால் மேலும் பலரை வேலைக்கு அமர்த்தக்கூடும்," என்றார் திருவாட்டி டியோ.

'செலக்ட் குழும' உணவுச் சேவைகள் நிறுவனத்திற்கு நேற்று வருகைபுரிந்தபோது அமைச்சர் இவ்வாறு சொன்னார்.

ஆட்குறைப்பு செய்யும் துறைகளில் இருந்து, விரிவாக்கம் காணும், ஆள்சேர்க்கும் மற்ற துறைகளுக்கு ஊழியர்கள் மாற வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"ஆயினும், உடனடியாக விரிவாக்கம் செய்ய நிறுவனங்கள் தயங்கலாம். வேலைக்கு ஆள் சேர்க்குமுன் தங்களுக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அவை விரும்பலாம்," என்றார் திருவாட்டி டியோ.

இந்தத் திட்டம் மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தமது அமைச்சு மதிப்பிட்டு வருகிறது என்றும் அவர் சொன்னார்.

ஆக அதிகமாக, உணவுச் சேவைகள் துறையில் 7,700 உள்ளூர் பணியாளர்கள் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். மொத்த விற்பனை, நிபுணத்துவச் சேவைகள், கட்டுமானம், கல்வி ஆகிய துறைகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய அச்சுப் பிரதியை நாடுங்கள்!

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வேலை