இந்திய நிலச் சொத்துகளில் $750 மி. முதலீடு; சிங்கப்பூரின் ஜிஐசி-இஎஸ்ஆர் கேமன் கூட்டு முயற்சி

இந்திய நிலச் சொத்துகளில் $750 மி. முதலீடு; சிங்கப்பூரின் ஜிஐசி-இஎஸ்ஆர் கேமன் கூட்டு முயற்சி

2 mins read
33b0b57b-27c5-4f03-9885-ed07b4bf3510
படம்: புளூம்பெர்க் -
Google News Preferred Icon

அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசியும் இஎஸ்ஆர் கேமன் நிறுவனமும் இந்தியாவில் நிலச் சொத்துகளில் முதலீடு செய்வது தொடர்பாக கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்தியாவில் தொழிற்துறை, தளவாடம் ஆகிய துறைகள் தொடர்பான சொத்துகளை வாங்கவும் மேம்படுத்தவும் 750 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படுகிறது.

இதில் ஜிஐசியின் பங்கு 80 விழுக்காடு. இஎஸ்ஆர் கேமனின் பங்கு 20%.

இந்தக் கூட்டு முயற்சியின்கீழ் அதிநவீன வசதிகளாக தொழிற்துறை, தளவாடச் சொத்துகள் மேம்படுத்தப்படும் என்று இரு நிறுவனங்களும் இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவெங்கும் உள்ள பிரதான நகரங்களிலும் அவற்றுக்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்களிலும் சொத்துகள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மும்பைக்கும் தானேவுக்கும் அருகில் உள்ள 2.2 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலச் சொத்திலும் முதலீடு செய்யப்படும்.

"கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஜிஐசி முதலீடு செய்து வருகிறது.

"இந்திய நிலச் சொத்து சந்தையில் எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இது பறைசாற்றுகிறது," என்று ஜிஐசியின் நிலச் சொத்துப் பிரிவின் தலைமை முதலீட்டு அதிகாரி திரு லீ கொக் சன் தெரிவித்தார்.

இந்தியாவின் நிலச் சொத்துத் துறையில் தொழிற்துறையும் தளவாடத்துறையும் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதை இருதரப்பினரும் சுட்டினர்.

தொழிற்துறை, தளவாடத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை நேர்மறைக் காரணிகளின் சங்கமம் தொடர்ந்து சாத்தியப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவெங்கும் உயர்தர தளவாட உள்கட்டமைப்புக்கான தேவை அதிகம் இருப்பதாலும் தொழிற்துறை, தளவாடத்துறை ஒருங்கிணைப்பு தொடரும் என்று முதலீடு செய்யும் இரு நிறுவனங்களும் கூறின.

ஆசிய பசிபிக் வட்டாரத்தை மையமாகக் கொண்ட தளவாட நிலச் சொத்து தளமான இஎஸ்ஆர் கேமன், ஹாங்காங் பங்குச் சந்தையில் இடம்பெற்றிருக்கும் நிறுவனமாகும்.

கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி இஎஸ்ஆர் கேமன் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ஏறத்தாழ 26.5 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

"இந்த உத்திபூர்வப் பங்காளித்து வத்தின் மூலம் இந்தியாவில் மிக விரைவாக நவீனமயமாகும் தொழிற்துறை, தளவாடத்துறை ஆகியவற்றை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

"இதன் மூலம் எங்களது தொழிற்துறை, தளவாடத்துறை ஆகியவற்றை விரிவுப்படுத்த எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிட்டி உள்ளது," என்று இஎஸ்ஆர் இந்தியாவின் தலைவர்களான அபிஜித் மல்கானியும் ஜெய் மிர்புரியும் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள தளவாட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஜிஐசியும் இஎஸ்ஆர் கேமனும் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்ய இருந்ததாக இவ்வாண்டின் முற்பகுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்