அதிபர் டிரம்ப்: எல்லைப் பாதுகாப்பு இந்தியாவுக்கு முக்கியம்

அதிபர் டிரம்ப்: எல்லைப் பாதுகாப்பு இந்தியாவுக்கு முக்கியம்

2 mins read
40994efa-df77-4e0f-a0cf-0f4db8b08307
பேரணிக்குப் பிறகு ஆதரவாளர்களுக்கு முன்னால் கைகோத்து நடந்த பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் (வலது). படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

எல்லைப் பாதுகாப்பு அமெரிக்காவுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல இந்தியாவுக்கும் முக்கியம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரில் நேற்று முன்தினம் 'ஹவ்டி மோடி' பேரணி நடத்தப்பட்டது. பேரணியை நேரில் காண 50,000க்கும் மேற்பட்டோர் என்ஆர்ஜி விளையாட்டரங்கத்தில் கூடியிருந்தனர். அவர்களில் பலர் அமெரிக்க இந்திய சமூகத்தினர்.

அமெரிக்காவில் இவ்வளவு அதிகமான ஆதரவாளர்களுக்கு முன்பு பிரதமர் மோடி உரையாற்றியது இதுவே முதல்முறை. அமெரிக்காவில் ஏறத்தாழ நான்கு மில்லியன் அமெரிக்க இந்தியர்கள் உள்ளனர். ஹியூஸ்டனிலும் பக்கத்து நகரான டெல்லஸிலும் கிட்டத்தட்ட 300,000 அமெரிக்க இந்தியர்கள் உள்ளனர்.

இந்த ஒன்றுகூடலை மிகப் பெரிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று அதிபர் டிரம்ப் வர்ணித்தார். அமெரிக்கா-இந்தியா உறவையும் அமெரிக்க இந்திய சமூகத்தினரையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராகப் பெரும்பாலான அமெரிக்க இந்தியர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆதரவைப் பெற டிரம்ப் முயற்சி செய்வதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

"நமது நெறிகளை நீங்கள் நிலைநாட்டுகிறீர்கள். அமெரிக்கர்களாக இருப்பதில் நீங்கள் பெருமை கொள்கிறீர்கள். நீங்கள் அமெரிக்கர்

களாக இருப்பது எங்களுக்குப் பெருமை," என்று பேரணியைக் காணத் திரண்டிருந்த அமெரிக்க இந்தியர்களை அதிபர் டிரம்ப் பாராட்டினார்.

இந்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல தாம் அவசர அவசரமாகச் செயல்படுவதாகக் கூறினார். மேம்பாடு என்ற சொல் இந்தியாவெங்கும் ஒலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பேரணி நிறைவுற்றதும் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் தங்கள் வலுவான நட்பை நிரூபிக்கும் வகையில் ஆதரவாளர்கள் முன்னால் கைகோத்து நடந்தனர்.

"பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அதிபர் டிரம்ப் அசைக்க முடியாக் கடப்பாடு கொண்டுள்ளார் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அண்மையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அனைத்துலக அளவில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாகச் சாடியுள்ளார். காஷ்மீர் தொடர்பாக மோடி எடுத்துள்ள நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெற்ற என்ஜிஆர் விளையாட்டரங்கத்துக்கு வெளியே சில சீக்கிய, முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின.