சிங்கப்பூரிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

சிங்கப்பூரிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

1 mins read
9f2a0bdd-0502-4e11-b1c0-4a388c496e84
சிங்கப்பூரிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட விஸ்தாரா விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை (ஜனவரி 18) சாங்கி விமான நிலைத்திற்கே அந்த விமானம் திரும்பியது. படம்: இணையம் -
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட விஸ்தாரா விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை (ஜனவரி 18) சாங்கி விமான நிலைத்திற்கு அந்த விமானம் திரும்பியது.

'ஃபிளைட்ரேடார்' இணையப்பக்கத்தின்படி, யூகே106 விமானம் காலை 11 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது. பின்னர் மலேசியாவில் வட்டமிட்ட அந்த ஏர்பஸ் விமானம், சாங்கி விமான நிலையத்திற்குத் திரும்பியது.

இச்சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு விஸ்தாரா பேச்சாளர் ஒருவர் பதிலளித்தார். விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் அதன் இயந்திரங்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு தென்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புறப்பட்ட இடத்துக்கே திரும்ப விமானிகள் முடிவெடுத்தனர். சாங்கி விமான நிலைத்தில் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது," என்று குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகளைச் செய்துதர பங்காளித்துவ விமான நிறுவனங்களுடன் சேர்ந்து விஸ்தாரா பணியாற்றி வருவதாகச் சொன்னார்.

பெரும்பாலான பயணிகள் மற்ற விமானங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளனர். அந்த விமானங்கள் அதே நாள் புறப்படவிருந்தன என்று அப்பேச்சாளர் கூறினார்.

விஸ்தாரா விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்று அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை. எனினும், அதன் ஏர்பஸ் ஏ321 விமானத்தில் 188 பயணிகள் வரை அமர்வதற்கான வசதி இருப்பதாக விஸ்தாரா இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகளில் சிலர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்திற்கு மாற்றிவிடப்பட்டதாக அறியப்படுகிறது. புதன்கிழமை மாலை அந்த விமானம் புறப்படவிருந்தது. அவர்களுக்கு உணவுப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.