2022: தீ விபத்து குறைவு, உயிரிழப்பு அதிகம்

2022: தீ விபத்து குறைவு, உயிரிழப்பு அதிகம்

2 mins read
def5ca3e-8210-40ba-8f97-b467241b03c4
சென்ற ஆண்டு 1,799 தீச்சம்பவங்கள் பதிவான நிலையில், அறுவர் உயிரிழந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டில் தீச்சம்பவங்கள் குறைந்தபோதும் உயிரிழப்பு கூடியது.

சென்ற ஆண்டு 1,799 தீச்சம்பவங்கள் பதிவாயின. ஒப்புநோக்க, 2021ல் இந்த எண்ணிக்கை 1,844.

கடந்த ஆண்டு தீச்சம்பவங்களில் ஆறு பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்திய ஆண்டில் இந்த எண்ணிக்கை நான்காக இருந்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று வெளியிட்ட வருடாந்தரப் புள்ளிவிவர அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 2022ஆம் ஆண்டில் தீயினால் மாண்டோரில் பாதிப் பேர், மே மாதம் பிடோக் நார்த் வட்டார அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீயில் உயிரிழந்தவர்கள். அச்சம்பவத்தில் மூன்று வயதுச் சிறுமி, அவளின் தந்தை உள்ளிட்ட மூவர் மாண்டனர்.

கடந்த மார்ச்சில் நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீயில் ஒருவர் உயிரிழந்தார். சென்ற ஆகஸ்ட் மாதம் ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்திலுள்ள ஒரு வீட்டில் தீ மூண்டதால் 48 வயது ஆடவர் ஒருவர் பலியானார்.

இந்த அறுவர் தவிர்த்து, சென்ற ஆண்டு மேலும் இருவர் உயிரிழந்துவிட்டனர் என்றும் ஆனால் அதுதொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சென்ற ஆண்டில் அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் தீ விபத்துகளில் காயமடைந்தோர் எண்ணிக்கை குறைந்தது.

கடந்த ஆண்டு குடியிருப்புக் கட்டடங்களில் 935 தீச்சம்பவங்கள் பதிவானதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.4% குறைவு.

இதற்கிடையே, சென்ற ஆண்டு அவசர மருத்துவ உதவி கோரி வந்த தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை 20.2% அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.