ஆயர் ராஜா உணவு நிலைய 17 அங்காடிக் கடைகளுக்கு பாரம்பரிய உணவு அங்கீகாரம்

ஆயர் ராஜா உணவு நிலைய 17 அங்காடிக் கடைகளுக்கு பாரம்பரிய உணவு அங்கீகாரம்

2 mins read
Google News Preferred Icon

ஆயர் ராஜா உணவு நிலையத்தில் செயல்படும் 17 அங்காடிக் கடைகள் சுவைமிக்க பாரம்பரிய உணவை விற்பனை செய்து வருகின்றன.

இதற்காக அந்தக் கடைகள் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. உணவு அங்காடிக் கடை கலாசாரத்தை மேம்படுத்தும் இயக்கத்தின் ஒரு பகுதியாக அந்தக் கடைகள் பாராட்டப்பட்டன.

'தலைசிறந்த சிங்கப்பூர் பாரம்பரிய உணவு' என்ற விருதை அனைத்துலக தொழில் கூட்டமைப்பு (IBF) அந்தக் கடைகளுக்கு வழங்கி உள்ளது.

சிங்கப்பூரில் செயல்படும் ஏறத்தாழ 110 உணவு அங்காடிக்கடைகளில் முதலாவதாக ஆயர் ராஜா உணவு நிலையத்துக்கு விருது கிடைத்துள்ளது.

-

உணவுத் தூதுவர்கள் அடங்கிய ஒரு குழு சென்ற வாரத்தில் அந்த உணவு நிலையத்தில் மூன்று நாட்கள் எல்லாவற்றையும் மதிப்பிட்டது. அதற்குப் பிறகு அந்த 17 கடைகளும் தேர்ந்து எடுக்கப்பட்டதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரடெரிக் யாப் தெரிவித்தார்.

உணவு அங்காடிக் கடை கலாசாரத்தை மேம்படுத்தும் இயக்கத்தின் அடுத்த கட்டம் ஏப்ரலில் இடம்பெறும். அப்போது பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த உணவு அங்காடிக் கடைகளைத் தேர்ந்து எடுக்கலாம்.

இந்திய ரோஜாக், நாசி லெமாக், சீன இடியாப்பம் போன்ற சிங்கப்பூருக்கே உரிய பாரம்பரிய உணவு ஒவ்வொன்றுக்கும் தலைசிறந்த 10 உணவு அங்காடிக் கடைகளைப் பட்டியலிடும் வழிகாட்டி புத்தகம் ஒன்று வெளியிடப்படும் என்று திரு யாப் கூறினார்.

சிங்கப்பூரில் செயல்படும் ஒவ்வோர் உணவு அங்காடி நிலையத்திலும் கிடைக்கக்கூடிய தலைசிறந்த பாரம்பரிய உணவு எது என்பதை விளம்பரப்படுத்துவது தான் இலக்கு என்றர் அவர்.

ஐநா அமைப்பின் யுனெஸ்கோ நிறுவனம் 'மானிட இனத்தின் கண்ணுக்குப் புலப்படாத கலாசார பாரம்பரியம்' என்ற ஒரு பட்டியலை உருவாக்கி இருக்கிறது. சிங்கப்பூரின் உணவு அங்காடி கலாசாரம் சென்ற டிசம்பரில் அதில் இடம்பெற்றது.

ஆயர் ராஜா உணவு நிலையத்தில் பாரம்பரிய உணவு அங்கீகாரம் பெற்றுள்ள கடைகளில் எம் முகம்மது இஸ்மாயில் (எண் 57) என்ற இந்திய முஸ்லிம் உணவுக்கடையும் ஒன்று. 2005ஆம் ஆண்டு முதல் திரு முகம்மது சுனைட் முகம்மது நூர், 42, என்பவர் நடத்திவரும் அந்தக் கடையில் மீகோரிங் பாரம்பரிய சுவையுடன் அருமையாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.