பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆட்டோ ஓட்டுநர் உட்பட நால்வருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆட்டோ ஓட்டுநர் உட்பட நால்வருக்கு 20 ஆண்டுகள் சிறை

2 mins read
8c604aef-1dfa-48b9-98fa-d66a762c2056
தண்டனை விதிக்கப்பட்ட பாா்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமாா். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

வேலூர்: பெண் மருத்துவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆட்டோ ஓட்டுநர் உட்பட நால்வருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வேலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானுரேகா தீர்ப்பளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வியாழக்கிழமை (ஜனவரி 30) தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து, பாா்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமாா் ஆகிய நான்கு குற்றவாளிகளும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவா் ஒருவா், கடந்த 2022 மாா்ச் 16ஆம் தேதி இரவு காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் தனது நண்பருடன் சினிமா பாா்த்துவிட்டு நள்ளிரவில் ஆட்டோவில் வீடு திரும்பினார்.

அப்போது, அந்த ஆட்டோவில் வந்த நால்வர் திடீரென வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டும்படி கூறி, பெண் மருத்துவரை கத்திமுனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

அத்துடன், பெண்ணிடமும் அவரது நண்பரிடமும் இருந்த கைப்பேசி, தங்கச்சங்கிலி, ஏடிஎம் அட்டையைப் பறித்துக்கொண்டு அடுத்த நாளன்று இருவரையும் விடுவித்துள்ளனர்.

அவர்களது ஏடிஎம் அட்டையில் இருந்து ரூ.40,000 பணத்தையும் அவர்கள் திருடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் தனது சொந்த மாநிலமான பீகாருக்குச் சென்று, அங்கிருந்து வேலூர் காவல் ஆய்வாளரின் மின்னஞ்சல் முகவரிக்குப் புகார் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் (20), பரத் (18), மணிகண்டன் (21), சந்தோஷ்குமார் (22), 17 வயது 6 மாதங்கள் நிரம்பிய இளையர் என ஐவர் கைதாகினர்.

வழக்கை விசாரித்த வேலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானுரேகா, குற்றம் சுமத்தப்பட்ட பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் ஆகிய நால்வருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இளையரின் வழக்கு சென்னையில் உள்ள இளம் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்