தமிழக அரசியல் களத்தை மாற்றியமைத்த வானிலை

தமிழக அரசியல் களத்தை மாற்றியமைத்த வானிலை

2 mins read
80a0c780-f5eb-4d6f-a896-6fbcf803c570
ஒவ்வொரு நாளும் பிரசார வியூகங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.  - படம்: என்டிடிவி
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: நடப்பாண்டுக் கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் தேர்தல் பிரசாரக் களம் முன் எப்போதும் இல்லாத வகையில் பல மாற்றங்களைச் சந்தித்திருப்பதாக அரசியல் கள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை நெருங்குவதால், சட்டமன்றத் தேர்தல் பிரசாரமானது அரசியல் வியூகத்தைப் போலவே வானிலையாலும் தீர்மானிக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்திலும் அனல் பறக்கிறது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிரூட்டி வசதியுள்ள வாகனங்களில் வலம்வரும் தலைவர்களே வெயிலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் நிலையில், தொண்டர்கள் படும்பாடு இன்னும் அதிகமாக உள்ளது.

முன்பெல்லாம் இடைவிடாத பிரசாரம் என்று குறிப்பிடுவர். இப்போதோ, காலை இரண்டு மணிநேரம் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், பிற்பகலில் ஓய்வெடுத்து மீண்டும் மாலை 4 மணியளவில்தான் பிரசார இடத்துக்கு வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் பிரசார வியூகங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தொப்பிகள், சால்வைகள், குடிநீர், மோர், இளநீர் எனப் பரவலாக விநியோகிக்கப்படுகிறது. தொண்டர்கள் இன்றி வெற்றி இல்லை என்பதால் வேட்பாளருக்கு இணையாகக் கவனிக்கப்படுகிறார்கள்.

திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையிலேயே பிரசார நடவடிக்கைகளைத் தொடங்கும் கட்சியினர், நண்பகலில் உச்ச வெயிலில் ஓய்வெடுப்பதாகவும் சூரியன் மறைந்த பிறகு மீண்டும் பிரசாரப் பணிகளைத் தொடங்குவதாகவும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

முன்பெல்லாம் நாள் முழுவதும் பேரணிகள், வீடுவீடாகச் சென்று பிரசாரம் என்றிருந்த நிலை மாறி, தற்போது வெப்பத் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் கவனமாகத் திட்டமிடப்பட்ட சந்திப்புகளாகப் பிரசாரம் உருமாறியுள்ளது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் சில இடங்களில் பெய்துவரும் கோடை மழை அப்பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

“சந்தைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டாலும் கடந்த காலத்தைப் போல் கட்சியினர் மத்தியில் வேகமும் சுறுசுறுப்பும் இல்லை.

“தவெக தலைவர் விஜய் போன்ற இளந்தலைவர்களே வெயிலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓய்வெடுப்பது கவனத்துக்குரியது. எனவே, மூத்த தலைவர்கள், குறிப்பாக முதுமைப் பருவத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர்.

“கடந்த தேர்தலில் சமூக ஊடகங்கள் பிரசாரத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தன. ஆனால், அதை மட்டுமே அரசியல் கட்சிகள் சார்ந்திருக்கவில்லை. இம்முறை வானிலை காரணமாக பிரசாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நிவர்த்தி செய்ய சமூக ஊடகப் பிரசாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் நிலவுகிறது,” என்கின்றனர் அரசியல் கள ஆய்வாளர்கள்.

குறிப்புச் சொற்கள்