சென்னை: உண்மையான காங்கிரஸ் கட்சியினர் தவெகவுடன் இருப்பதாக அக்கட்சித் தலைவர் விஜய் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான பொய் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், காங்கிரசாரிடம் விஜய் மன்னிப்பு கோர வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.
விஜய் தெரிவித்துள்ள கருத்துகள் ஆதாரமற்றவை என்றும் திரித்துக் கூறப்பட்டவை என்றும் திரு செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பணம் அல்லது அதிகாரத்தின் வாயிலாக யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்றும் தன் கொள்கைகளுக்கும் மக்கள் நலனுக்கும் ஏற்ப கட்சி செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தவெக எத்தகைய திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது என அனைவரும் அறிவர். காங்கிரசில் ஆள்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட தவெகவிற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர்தான் சிக்கினர்,” என்று செல்வப்பெருந்தகை அறிக்கையில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சீண்டிப் பார்ப்பதை விஜய் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

