சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வன்னி அரசு திண்டிவனம் தொகுதியிலும், ஷாஜஹான் பாபநாசம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னி அரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள்.
வியாழக்கிழமை மாலை முஸ்லிம் லீக் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதாக அறிவித்தன.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை (மே 22) இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்தோர் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றது வரலாற்றிலேயே இதுவே முதன்முறை.
இதையடுத்து, அக்கட்சியினர் அமைச்சரவையில் அதிகாரபூர்வமாக அங்கம் வகிக்கின்றனர்.
தவெக கூட்டணியில் காங்கிரஸ் இரண்டு, விசிக, ஐயூஎம்எல் அமைச்சர்கள் தலா ஒருவர் இடம்பெற்றுள்ளனர். தொடக்கத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து வழங்கிய இந்த இரு கட்சிகளும் தற்போது ஆட்சியில் அதிகாரம் பெற்றிருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது.
ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மே 10ஆம் தேதி ஜோசப் விஜய் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அமைச்சரவையில் விசிகவும் ஐயூஎம்எல் கட்சியும் இடம்பெற வேண்டும் என்று தவெக அழைப்புவிடுத்தது. அதைப் பரிசீலித்த இரண்டு கட்சிகளும் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க, வன்னி அரசு, ஷாஜஹான் ஆகியோர் அமைச்சர்களாகி இருக்கின்றனர்.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுத்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவி வழங்கக் கூடாது என்று இடதுசாரிகள், விசிக தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், அந்த 25 பேருக்கும் அமைச்சரவையில் இதுவரை இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 35 அமைச்சர்கள் வரையில் நியமிக்க அரசமைப்புச் சட்டத்தில் உச்சவரம்பு உள்ள நிலையில், வியாழக்கிழமை 23 அமைச்சர்கள், வெள்ளிக்கிழமை 2 அமைச்சர்கள் என 25 பேர் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 25 அமைச்சா்களுக்கும் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதுவரை தவெக சார்பில் 31, காங்கிரஸ் சார்பில் 2, விசிக 1, ஐயூஎம்எல் 1 என 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா்.
இதன்மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

