விவசாயிகளின் பிரச்சினைகளை தவெக சரிசெய்யும்: விஜய் வாக்குறுதி

விவசாயிகளின் பிரச்சினைகளை தவெக சரிசெய்யும்: விஜய் வாக்குறுதி

2 mins read
66b6d758-bdd8-479a-9254-237b56d2ebb0
திருச்சி விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

தஞ்சாவூர்: விவசாயம் பற்றி அதிகம் தெரியாது என்றாலும் விவசாயிகளின் சிரமம் தனக்குத் தெரியும், அவர்களின் பிரச்சினைகளைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சரிசெய்யும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (மார்ச் 4) காலை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது விஜய் இவ்வாறு கூறினார்.

பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.

மணல் கொள்ளைக்குக் காரணமாக உள்ள மணல் திருட்டுக் குழுக்களுக்கு திமுக அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“அண்மையில் ‘தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு தவிக்கும்’ என்று ஒரு கட்டுரை படித்தேன். அது வருத்தம் தந்தது. காரணம், நிலத்தடி நீரை நாம் பாதுகாக்காமல் இருப்பதுதான்,” என்று விஜய் கூறினார்.

“விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மழைநீரில் வீணாகிறது. அதற்கான சரியான சேமிப்பு இடங்கள் இல்லை. போராடும் விவசாயிகளுக்குத் திமுக ஆதரவு வழங்கவில்லை. மாறாக, கைது நடவடிக்கை தான் நடக்கிறது,” என்றும் அவர் சொன்னார்.

ஒருவர் அமைதியாக இருந்தால் அவருக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துவிடவேண்டாம் என்றார் விஜய்.

திருச்சியில் சலசலப்பு

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜய் தனி விமானம் மூலம் காலை 9:35 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.பின்னர் அங்கிருந்து வேனில் ஏறி கூட்டத்திற்குச் சென்றார்.

விஜய் வருகையை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு விமான நிலையத்திற்குள் அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவரும் விமான நிலையத்திற்கு வெளியே திருச்சி-புதுக்கோட்டைச் சாலையில் திரளாகக் காத்திருந்தனர்.

அவரது வாகனத்தைச் செல்ல விடாமல் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர். மாத்தூர் ரிங் ரோடு அருகே திரண்டு இருந்த ரசிகர்கள் அவரது வாகனத்தை மறித்து வரவேற்றனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்