நெதா்லாந்து ஏலத்தில் தொன்மையான கண்ணப்ப நாயனார் சிலை; சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை

நெதா்லாந்து ஏலத்தில் தொன்மையான கண்ணப்ப நாயனார் சிலை; சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை

1 mins read
d6f62ae3-de5c-45b9-860a-b7bd60fe22e9
நெதர்லாந்தின் நுண்கலைக் கண்காட்சியில், தமிழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட கண்ணப்ப நாயனார் உலோகச் சிலை ஏலம்விட இருப்பதைத் தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்டறிந்தது. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டின் பழைமையான கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் ஏலம் விடப்படுவதிலிருந்து தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நிறுத்தியுள்ளது.

11ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அந்த உலோகச் சிலை நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயிலைச் சேர்ந்தது. 64 சென்டிமீட்டர் உயரம், 23 கிலோ எடை கொண்ட அச்சிலை 2010ஆம் ஆண்டு திருடப்பட்டது.

சிலைத் திருட்டு குறித்து திட்டச்சேரி காவல்துறையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவும் விரிவான விசாரணை மேற்கொண்டதில், சிலை, நெதர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சில் இருப்பதும், அந்த நாட்டின் மாண்டரிச் மாகாணத்தில் உள்ள ஐரோப்பிய நுண்கலைக் கண்காட்சியில் ஏலத்தின் மூலம் விற்கப்பட உள்ளதும் தெரியவந்தது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பிரவேஷ்குமாா், நெதா்லாந்து காவல்துறையை மின்னஞ்சல் மூலம் தொடா்புகொண்டு ஏலத்தை நிறுத்துமாறும், அந்தச் சிலை திருடப்பட்டுக் கடத்தப்பட்டதையும் தெரிவித்தாா். இதையடுத்து ஏலம் நிறுத்தப்பட்டது.

சிலையை நெதா்லாந்திலிருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். ஏலத்தை விரைந்து தடுத்து நிறுத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளைத் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பாராட்டினாா்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுசிலைக் கடத்தல்நெதர்லாந்துகாவல்துறை