சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டம்: ஒரு வாரக் காலக்கெடு

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டம்: ஒரு வாரக் காலக்கெடு

2 mins read
1001d442-3506-4708-9a74-5f95da3e2db6
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மும்மொழி பாடத் திட்டத்தை ஒரு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. - படம்: தினமணி

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உத்தரவிட்டுள்ளது.

2026-2027 கல்வியாண்டு முதல் 6ஆம் வகுப்பிலிருந்து மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்பது கட்டாயமாக்கப்படுகிறது.

இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும்.

புதிய பாடத்திட்ட முறையின்படி பல்வேறு பள்ளிகள் ஏற்கெனவே மும்மொழி பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

எனினும், இதுவரை இத்திட்டத்தைத் தொடங்காத பள்ளிகள், இந்த அறிவிப்பு வெளியான ஏழு நாள்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என இயக்குநர் பிரக்யா எம்.சிங் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

6ஆம் வகுப்பில் அறிமுகம் செய்யப்படும் அதே மூன்றாவது மொழிதான், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளிலும் விருப்பப் பாடமாகத் தொடரும்.

இதற்கான அதிகாரபூர்வ புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும். அதுவரை உள்ளூர் வளங்களைக் கொண்டு கற்பித்தலைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் மொழித்திறன், தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு: தேர்ச்சி விதிமுறைகள் மாற்றம்

2027ஆம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்ச்சி விதிகளை சிபிஎஸ்இ கடுமையாக்கியுள்ளது.

இனி மாணவர்கள் எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு (Internal Assessment) ஆகிய இரண்டிலும் தனித்தனியாக 33 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி எனக் கருதப்படுவர்.

இதற்குமுன், இரண்டையும் கூட்டி ஒட்டுமொத்தமாக 33 விழுக்காடு எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது.

உதாரணமாக, 80 மதிப்பெண் கொண்ட எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 26.5 மதிப்பெண்களைக் கட்டாயம் எடுக்கவேண்டும்.

அக மதிப்பீட்டு மதிப்பெண்களை மட்டும் நம்பி தேர்ச்சி பெற முடியாது என்பதால், மாணவர்கள் எழுத்துத் தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது இனி அவசியம்.

குறிப்புச் சொற்கள்