திருநெல்வேலி: சுற்றி இருப்பவர்கள் மூலம் தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விவாகரத்துக் கோரியுள்ள அவரின் மனைவி சங்கீதாவை மறைமுகமாகக் குறிப்பிட்டே விஜய் அவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.
திருநெல்வேலியில் புதன்கிழமை (ஏப்ரல் 8) பிரசாரம் மேற்கொண்ட அவர், எத்தனை சோதனைகள் வ்ந்தாலும், தம்மை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்றார்.
“இத்தனை ஆண்டுகள் திட்டமிட்டுச் சரியாகத் தேர்தலுக்கு முப்பது நாள்களுக்கு முன்பு என்னைப் பற்றி அவதூறு பரப்பி உள்ளனர். அது என்ன அவதூறு என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால், அது எடுபடவில்லை.
“நான் பிரசாரம் மேற்கொண்டால் மட்டும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். மற்றக் கட்சிகளின் தலைவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. என்னை வெளியே விடக்கூடாது எனத் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள்,” என்றார் விஜய்.
இதனிடையே, நெல்லையில் பிரசாரம் மேற்கொண்டபோது, தவெக தொண்டர்களும் பொதுமக்களும் குளிர்பானங்கள், கிட்டார் இசைக்கருவி, கரும்பு, குர்ஆன் புத்தகம் எனப் பலவற்றை அளித்து விஜய்யை உற்சாகப்படுத்தினர்.
பரிசளிக்கப்பட்ட கிட்டாரை ஓரிரு நிமிடங்கள் வாசித்தார் விஜய். தன்னை நோக்கி வீசப்பட்ட பூமாலைகளை மீண்டும் தொண்டர்கள் மீதே வீசி அவர்களை மனம் மகிழச் செய்தார்.
16 பேர் காயம்
இதனிடையே, தூத்துக்குடி, திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றபோது, இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற இளையர்களை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர்.
காரைக்குடியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், ரசிகர்கள், தொண்டர்கள் மின்மாற்றி, மின் கம்பங்கள், மரங்கள் மீது ஏறுவதைத் தடுப்பதற்காக அவற்றைச் சுற்றி தகர ‘ஷீட்’ கொண்டு அரண் அமைக்கப்பட்டுள்ளது.

