ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி

அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்புக் கேட்ட ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி

2 mins read
c0575f66-d298-47aa-b733-0b64aebb8fe4
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அதனால் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சேலம்: ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 29) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவரைக் கட்சியிலிருந்து நீக்கியது பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு. நான் எடுத்த முடிவு இல்லை என்றார்.

“அவர் நான்கு ஆண்டுகளாகக் கட்சியில் இணைய வேண்டும் எனக் கேட்டு வருகிறார். அவர் கட்சிக்கு இழைத்த துரோகம் காரணமாக 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த முடிவின்படி, ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை,” என்று அவர் கூறினார்.

“தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதி வடிவம் பெற்றவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கும்,” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முன்னதாக தேனியில் பேசிய ஓபிஎஸ், டிடிவி தினகரன், எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற வேண்டும் எனக் கூறுகிறார்கள். அதைத்தான் நானும் கூறுகிறேன். நாங்கள் இணைய வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

“இரண்டாவது தர்மயுத்தம் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரால்தான் ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கப்படவில்லை. கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது. அதிமுகவில் இணைய நாங்கள் தயார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா” என்று அவர் கேட்டிருந்தார்.

அதிமுகவில் இணைய ஓபிஎஸ் மீண்டும் விருப்பம் தெரிவித்த நிலையில், இபிஎஸ் அதனை உடனடியாக மறுத்துள்ளார். எனவே, இனி ஓபிஎஸ் அடுத்தகட்டமாக என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்