மேகதாது அணையைக் கட்ட தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது: துரைமுருகன்

1 mins read
562d44a3-3834-4ea9-abbc-9bebfc13ea1b
துரைமுருகன். - படம்: தி இந்து

சென்னை: மேகதாது அணையைக் கட்ட தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படியும் தமிழக முதல்வரின் உத்தரவுப்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மத்திய நீர்வளக் குழுமத்துடன் மேகதாது அணை எவ்வாறு தமிழகத்துக்குச் சாதகமாக இருக்கும் என்பதையும் எவ்வாறு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய ஆணைக்கு முரணாக இருக்கும் என்பதையும் விரிவாகக் குறிப்பிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தமிழகம் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது,” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

எனினும், கர்நாடக அரசு மேகதாது அணை நிச்சயம் கட்டி முடிக்கப்படும் எனக் கூறி வருகிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால், இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் மேலும் பெரிதாகும் எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.

மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு உட்பட்டதா, இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம்தான் தீர்மானிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்