சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டைப் பாதிக்கும் வகையிலோ வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கும் வகையிலோ ஏதாவது நடந்தால், தமிழ்நாடே நிலைகுத்திப்போகும்.
“தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காரும். மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். “இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டி இருக்கும். 50-60களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா திரும்பவும் பார்க்க வேண்டி இருக்கும். தேர்தல், ஆட்சி, அதிகாரம் இதுவெல்லாம் எங்களுக்கு இரண்டாம்பட்சம்தான்,” என்று தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் அவர் எச்சரித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் நாடாளுமன்றக் கூட்டம்
நாடாளுமன்ற, மாநில சட்டமன்றத் தேர்தலில் மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 273 நாடாளுமன்ற இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543லிருந்து 816ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, ஏப்ரல் 16 முதல் மூன்று நாள்களுக்கு நாடாளுமன்றச் சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது.
தேர்தல் வேளையில் நடைபெறும் இக்கூட்டம் குறித்து ஸ்டாலின் பேசியுள்ளார்.
“தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகிறார்கள் என்பது பற்றித் தெரியவில்லை. சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றிய எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மாநில உரிமைகளை மத்திய அரசு படுகொலை செய்திருக்கிறது,” என்றார் அவர்.
தொகுதி மறுவரையறை திட்டம்: தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்வு சாத்தியம்
ஸ்டாலினின் பேச்சுக்குப் பதிலளித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்திருந்தால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 தொகுதிகளில் இருந்து 31 தொகுதிகளாக குறைந்திருக்கும். தென் மாநிலங்கள் பாதிக்காத வகையில்தான் பிரதமர் தொகுதி மறுவரையறை செய்கிறார் என்றார் அவர்.
தொகுதி மறுவரையறையை மக்கள்தொகை அடிப்படையில் மத்திய அரசு செய்யவில்லை, ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகள் 50 விழுக்காடு உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 39லிருந்து 59வரை உயர வாய்ப்பு இருக்கிறது. கேரள மாநிலத்தில் 20லிருந்து 30வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யாமல், அனைவரையும் ஒரு மனதோடு, ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் மத்திய அரசு எடுத்துச் செல்ல நினைக்கிறது.
2023 செப்டம்பரில், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது மக்கள்தொகையின் அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று எங்குமே கூறப்படவில்லை என்று அவர் கூறினார்.

